955. | பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் அமலன் னிடமாம் இண்டை கொண்டன் பிடைஅ றாத தோண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே. | | 2 |
956. | கோல அரவுங் கொக்கின் இறகும் மாலை மதியும் வைத்தான் இடமாம் ஆலும் மயிலும் ஆடல் அளியும் சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே. | | 3 |
2. பொ-ரை: அன்பு, இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள், இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற, உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும். கு-ரை: 'அண்டத்திற்கு முதல்வன்' என நான்காவது விரிக்க, "அண்டம்" என்ற பொதுமையால், எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், இதனை, 'அகிலாண்டகோடி' என்பர். "இண்டை" என்றது, ஏனையவைகளையும் தழுவநின்ற உபலக்கணம். "அன்பு இடையறாத தொண்டர்" என்பது, 'மெய்யடியார்' என்றவாறு. யாதானும் ஒரு நிமித்தம் பற்றிச் செய்யப்படும் அன்பு, அந்நிமித்தம் நீங்க, அதனோடே அற்றொழியும்; அவ்வாறு யாதோரு நிமித்தமும் பற்றாது நேரே செய்யப்படும் அன்பு, ஒரு ஞான்றும் கெடுவது இல்லை. இத்தகைய அன்புடையவரையே, "மெய்யன்பர்" என நூல்கள் யாண்டும் உயர்த்துக்கூறும். இம் மெய்யன்பினை, இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு. (தி. 11 அற்புதத் திருவாந்தாா - 2.) என்னும் அம்மை திருமொழியால் இனிதுணர்க. 3. பொ-ரை: சோலைகள், ஆடுகின்ற மயில்களையும், சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, அழகிய பாம்பையும், கொக்கின் இறகையும், மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையையும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும்.
|