957. | பளிக்குத் தாரை பவள வெற்பில் குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம் அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம் துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே. | | 4 |
958. | உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு வதையுஞ் செய்த மைந்தன் இடமாம் திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறும் துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே. | | 5 |
கு-ரை: சிவபெருமான் கொக்குருவம் கொண்ட அசுரனை அழித்து, அதன் அடையாளமாக கொக்கிறகைச் சடையில் அணிந்தமையைக் கந்தபுராணத்தும் காண்க. இனி, "கொக்கிறகு" என்பதொரு மலரும் உண்டு. 'முடியில்' என்பது ஆற்றலாற் கொள்க. கொண்டு காட்டுதலை, 'தருதல்' என்று அருளினார். 4. பொ-ரை: தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து, மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும். கு-ரை: 'பவள வெற்பிற் குளிக்கும் பளிக்குத் தாரைபோல் நூல்' எனக் கொண்டு கூட்டி உரைக்க. பவளமலை இறைவனது திருமேனிக்கும், அம்மலைமேல் உள்ள பளிங்கு அருவி அவனது மார்பிற் புரளும் முப்புரி நூலுக்கும் உவமை. இஃது இல்பொருளுவமையாம். 'அளிக்கும் ஆத்தி' என்னும் பாடம் சிறவாமையறிக. "மதுவம்" என்பதில் அம், தவிர்வழி வந்த சாரியை. 5. பொ-ரை: நிலைபெற்ற மகரந்தமும், தேனும், வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற, காவிரி யாற்றையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னுந் தலமே, கூற்றுவனுக்கு உதையையும், ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடையவனாகிய இறைவனுக்கு இடமாகும்.
|