பக்கம் எண் :

1231
 
959.ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண் டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.

6



கு-ரை: விதி - ஊழ்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

- குறள் - 380

என்பவாகலின், "ஒல்கா விதி" என்று அருளினார். மார்க்கண்டேயரது ஊழினை அடியோடு அழித்தமையின், இறைவனை, 'விதிக்கு வதை செய்தவன்' என்று அருளினார்.

உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகறியப்
பான்முனை தின்று மறலி உயிர்குடித்த
கான்முளையே போலுங் கரி.

- நிதிநெறிவிளக்கம் - 50

என, பின்வந்தோர் கூறுதலும் காண்க. இனி 'விதி - தக்கன்' என்பாரும் உளர். 'திதியும்' என்பது, எதுகை நோக்கித் திரிந்து நின்றது. இது, 'திதி' அடியாகப் பிறந்த பெயரெச்சம்.

6. பொ-ரை: குளிர்ந்த நீரை உண்டு, தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, மிக்க நீரையுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட, அருள்மிகுந்த பெருமான் விரும்பும் ஊராகும்.

கு-ரை: பிறர்நலமே கருதுவதாகிய அன்பே ஆக; அருளே ஆக; அவை தமக்கு வருங் கேட்டினை அறியும் அறிவைப் போக்குமாதலின், அத்தன்மை புலப்படுத்தற்பொருட்டு இறைவனையும் விளைவதறி யாது நஞ்சினை உண்டானாக அருளிச்செய்தார்; எனவே, 'பித்தன்' முதலியபோல, "பேதைப் பெருமான்" என்றதும், பழிப்பதுபோலப் புகழ் புலப்படுத்தாயிற்று. மாந்தளிர்கள் நெருப்புப் போலத் தோன்றுதலின், "சீதப்புனல் உண்டு எரியைக்காலும் சூதம்" என்று அருளிச் செய்தார்; இது விரோதவணி.