966. | அன்றில் முட்டா தடையுஞ் சோலை | | ஆரூ ரகத்தீரே | | கன்று முட்டி உண்ணச் சுரந்த | | காலி யவைபோல | | என்றும் முட்டாப் பாடும் அடியார் | | தங்கண் காணாது | | குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் | | வாழ்ந்து போதீரே. | | 3 |
குற்றம் ஒன்றும் செய்ததில்லை; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கிவிட்டீர்; எதன்பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர்? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர்; எனக்குப் பழி யொன்றில்லை; பன்முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர்; மற்றொரு கண்ணைத்தர உடன்படாவிடின், நீரே இனிது வாழ்ந்துபோமின்! கு-ரை: நம்பியாரூரர் செய்தது குற்றமாகாமை. "பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால்" (தி. 7 ப. 89 பா. 1) என்றவிடத்து விளக்கப்பட்டது. அதனானே, இங்கு, "குற்றம் ஒன்றும் செய்ததில்லை" என்று அருளினார். "நீரே பழிப்பட்டீர்" என்றதன் காரணமும், அவ்விடத்தே, "பழியதனைப் பாராதே" என்றதன் விளக்கத்துட் காண்க. 3. பொ-ரை: அன்றிற் பறவைகள் நாள்தோறும் தப்பாது வந்து சேர்கின்ற, சோலையையுடைய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரே, கன்றுகள் முட்டி உண்ணத் தொடங்கிய பின்னே பால் சுரக்கின்ற பசுக்களிடத்தில் பாலை உண்ணும் அக் கன்றுகள் போல, நாள்தோறும் தப்பாது பாடியே உம்மிடத்துப் பயன்பெறுகின்ற அடியார்கள், பலநாள் பாடியபின்னும் தங்கள் கண் காணப்பெறாது, குன்றின்மேல் முட்டிக் குழியினுள் வீழ்ந்து வருந்துவராயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்! கு-ரை: 'உமது பண்டமாற்றுச் செயலிலும் நில்லாது, கொள்வதன்றிக் கொடுக்கின்றிலீர்' என்றவாறு. 'காலியின்கண்' என ஏழனுருபு விரிக்க. "அவை" என்றது சுட்டுப்பெயர். "பாடும்" என்றது, 'பாடிப் பயன்பெறும்' எனப் பொருள்தந்தது. ஈண்டும், "அடியார்" என, தம்மையே பிறர்போல அருளினமை காண்க. 'காணாது' என, சினை வினை முதல்மேல் நின்றது.
|