பக்கம் எண் :

1238
 
967.துருத்தி யுறைவீர் பழனம் பதியாச்

சோற்றுத் துறையாள்வீர்

இருக்கை திருவா ரூரே உடையீர்

மனமே யெனவேண்டா

அருத்தி யுடைய அடியார் தங்கள்

அல்லல் சொன்னக்கால்

வருத்தி வைத்து மறுமைப் பணித்தால்

வாழ்ந்து போதீரே.

4


968.செந்தண் பவளந் திகழுஞ் சோலை

இதுவோ திருவாரூர்

எந்தம் அடிகேள் இதுவே யாமா

றுமக்காட் பட்டோர்க்குச்

சந்தம் பலவும் பாடும் மடியார்

தங்கண் காணாது

வந்தெம் பெருமான் முறையோ என்றால்

வாழ்ந்து போதீரே.

5



4. பொ-ரை: இருக்குமிடம் திருவாரூராகவே உடையவரே, நீர் இன்னும், 'திருத்துருத்தி, திருப்பழனம்' என்பவைகளையும் ஊராகக் கொண்டு வாழ்வீர்; திருச்சோற்றுத்துறையையும் ஆட்சி செய்வீர்; ஆதலின், உமக்கு இடம் அடியவரது மனமே எனல் வேண்டா; அதனால் உம்பால் அன்புமிக்க அடியார்கள், தங்கள் அல்லலை உம்மிடம் வந்து சொன்னால், நீர் அவர்களை இப்பிறப்பில் வருத்தியே வைத்து, மறுபிறப்பிற்றான் நன்மையைச் செய்வதாயின், நீரே இனிது வாழ்ந்துபோமின்!

கு-ரை: "உறைவீர்" என்றதனை, "பதியா" என்றதன் பின்னர்க்கூட்டுக. பணித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க.

5. பொ-ரை: எங்கள் தலைவரே, இது, செவ்விய தண்ணிய பவளம்போலும் இந்திரகோபங்கள் விளங்குகின்ற சோலையை யுடைய திருவாரூர் தானோ? நன்கு காண இயலாமையால் இதனைத் தெளிகின்றிலேன்; உமக்கு அடிமைப்பட்டோர்க்கு உண்டாகும் பயன், இதுதானோ? இசை வண்ணங்கள் பலவும் அமைந்த பாடலால் உம்மைப் பாடுகின்ற அடியார்கள், தங்கள் கண் காணப்பெறாது, உம்பால் வந்து, 'எம் பெருமானே, முறையோ' என்று சொல்லி நிற்றல் ஒன்றே உளதாகுமானால், நீரே இனிது வாழ்ந்துபோமின்!