பக்கம் எண் :

1244
 

96. திருவாரூர்ப் பரவையுண் மண்டளி

பதிக வரலாறு:

சுவாமிகள், திருதுருத்தியீசரைத் தொழுது, சில நாள்கள் தங்கி, பல பதிகளையும் வணங்கிக் கொண்டு, திருவாரூரையணுகி, அத்தலத்தின் தோற்றத்தை ஒரு கண்ணால் கண்டு இன்புறாதவறாய், நிலமிசை வீழ்ந்து வணங்கி, மாலைக் காலத்தில் தொண்டர்களுடன் உள்ளணைந்து, இத் திருக் கோயிலிற் சென்று வணங்கி, "இங்கு எமது துயர்களைந்து கண் காணக்காட்டாய்" என்று வேண்டிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 303)

குறிப்பு: இத் திருப்பதிகம் நுதலிய பொருளும், இதன் வரலாற்றானே விளங்கும்.

பண்: பஞ்சமம்

பதிக எண்: 96

திருச்சிற்றம்பலம்

975.தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே.

1


1. பொ-ரை: தூய்தாகிய வாயினையுடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே, உனக்குத் தொண்டு செய்பவர்கள் படுகின்ற துன்பங்களை நீக்கமாட்டாயோ! ஐவர்கள் என்னை எப்போதும் குறிக்கொண்டு நோக்கி, உன்னை அடையவொட்டாமல் தடுப்பினும், நாவையுடைய வாயால், உன்னையே, நல்லவற்றைச் சொல்லிப் புகழ்வேனாகிய எனக்கு, 'ஆவா' என்று இரங்கி, அச்சந் தீர்த்தருள்.

கு-ரை: "தூவாய்" என்றது, வேதத்தைச் சொல்லும் வாய் என்றவாறு. இங்ஙனம் வாயைச் சிறப்பித்தருளியது. 'அதனால் அஞ்சேல் என்று சொல்' என்றற்காம். "காவாயா" என்றது 'காப்பவ னல்லையோ' என்றபடி. 'காவாயே'