982. | காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்தெம் கூற்றானே கோல்வளை யாளையொர் பாகமாய் நீற்றானே நீள்சடை மேல்நிறை யுள்ளதோர் ஆற்றானே பரவையுண் மண்டளி அம்மானே. | | 8 |
மாயா புவனத்தில் உள்ளவர்கள், அவர்கட்கு மேல் உள்ள வானம், சுத்தமாயா புவனம், இதனை, "மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி" (தி. 6. ப. 57 பா. 7) என்ற ஆளுடைய அரசுகள் திருமொழியோடு ஒருபுடையால் வைத்து நோக்கற் பாலது, சொல்வடிவாய உலகம். எண்ணும் எழுத்தும் என இருவகைத்து, அவற்றுள், 'எழுத்து' என்னும் பகுதியை, 'எழுத்து, சொல், பொருள்' என மூன்றாக வகுத்தல், தமிழ் வழக்கு. ஆதலின், எண்ணினை, "தானே" என வேறு பிரித்தும், ஏனையவற்றை ஒருங்கு வைத்தும் அருளிச் செய்தார். சொல்லுலகத்திற்கு முதலாவது சுத்த மாயை யாகலின், பின்னர் அவ்வுலகத்தை வகுத்தோதுவார், முதற்கண், அதற்கு முதலாய சுத்த மாயையை ஓதியருளினார், 'மேலையார் மேலையார் மேலாய விண்' என, முன்னே கூட்டுக. "விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானைப் பதம்சந்திப் பொருள் உருவாம் புண்ணியனை" (தி. 4 ப. 7 பா. 8) என்று அருளியவிடத்தும் தமிழ்வழக்குப்பற்றி, சொல்லுலகம் மூன்றாக வகுத்தருளிச் செய்யப்பட்டமை அறியற்பாற்று, இதனுள், "சந்தி" என்றது எழுத்தினையாதல் வெளிப்படை. 'கொண்டிட்டு' என, எச்சமாக ஓதினாராயினும், 'கொண்டிட்டாய்' என முற்றாக உரைத்தலே திருவுள்ளம் என்க. இனி, எச்சமாகவே வைத்து, 'கண்ணைக் காட்டு கின்றிலை' என உரைத்தலுமாம், 'அண்டம்' என்பது நீட்டலாயிற்று. 8. பொ-ரை: காற்றாய் உள்ளவனே, கரிய மேகம் போல்வதாகிய ஒப்பற்ற கண்டத்தையுடைய, எம் இனத்தவனே, கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்தவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு திரு நீற்றை அணிந்தவனே, நீண்ட சடையின் மேல் நிறைவுள்ளதாகிய ஒரு நதியை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே.
|