பக்கம் எண் :

1259
 
994.காலமும் நாள்கழியுந் நனி

பள்ளி மனத்தின்உள்கிக்

கோலம தாயவனைக் குளிர்

நாவல ஊரன்சொன்ன

மாலை மதித்துரைப்பார் மண்

மறந்துவா னோர்உலகில்

சாலநல் லின்பமெய்தித் தவ

லோகத் திருப்பவரே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: காலமும் நாள்தோறும் கழியாநிற்கும், அதனால், குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே யாவர்.

கு-ரை: "காலமும்" என்ற உம்மை சிறப்பு; அச்சிறப்பாவது, எல்லா வாழ்விற்கும் முதலாய் நிற்றல். அச்சிறப்பினையுடைய அது தானும் நில்லாது பெயர்வது என்றவாறு. 'நாளும்' என்னும் உம்மை, தொகுத்தலாயிற்று. அதன்பின், 'ஆதலின்' என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, 'மதித்துரைப்பார்' என்றதனோடு முடிக்க. "சொன்ன" என்றதனோடு முடிப்பாரும் உளர். 'காலமு நாழிகையும்' என்பதும் பாடம். "மண் மறந்து" என்றது, 'மண்ணிற் பிறவாது' என்றபடி. அதனை, "எய்தி" என்றதன்பின்னர்க் கூட்டியுரைக்க. 'தவலோகம், சிவலோகம்' என்பன, வேறுவேறு காரணத்தான் வந்த குறியாய், ஒன்றனையே உணர்த்துவதாம். ஏகாரம், தேற்றம்.

 

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

 
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நற்றமிழின்
புனிதநறுந் தொடைபுனைந் திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம் பதிபலவும் பணிந்துபோய்த்
தனிவிடைமேல் வருவார்தம் திருநின்றி யூர்சார்ந்தார்.

149

-தி. 12 சேக்கிழார்