100. திருநொடித்தான் மலை பதிக வரலாறு: சுவாமிகள், திருவஞ்சைக்களத்துப் பெருமானைப் பணிந்து, 'இவ்வுலக வாழ்வை நீக்குதல் வேண்டும்' என்று வேண்டி, "தலைக்குத் தலைமாலை" என்னும் திருப்பதிகத்தில் பாடிய குறிப்பால், திருக்கயிலைப் பெருமான், 'நம் ஆரூரனை வெள்ளானையில் ஏற்றிக் கொணர்க' என்று அருளியவாறு, மால் அயன் முதலாகிய தேவர்கள் திருவஞ்சைக்களம் வந்து, சுவாமிகளை வணங்கி, 'அருளிப்பாடு' எனப் போற்றி, 'ஏவல்' என்றனர். சுவாமிகளும் பணிந்து எழுந்து எதிரேற்று, சேரர் பெருமானை எண்ணியவராய், வெள்ளானையின் மீதேறி, சேரர் பெருமானும் பின்பு வந்து தமது குதிரையில் முன்னே செல்ல, வான் வழியில் பாடிக்கொண்டே சென்று, திருக்கயிலையில் முடித்தருளியது இத்திருப்பதிகம். (தி. 12. வெள்ளானைச். சரு. 39) சுவாமிகள், இத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் அருளிய அருளாணையின் வண்ணம் வருணனால் திரு, வஞ்சைக் களத்தில் இது சேர்ப்பிக்கப்பெற்றது. குறிப்பு: இத்திருப்பதிகம் பல பெருமைகளையுடையது. அவை, தேவாரத் திருமுறைகளை நிறைவு செய்தமை, களையா உடலோடு நம்பியாரூரர் வெள்ளானையின்மீது வான் வழியாகத் திருக்கயிலை செல்லுங்கால், இறைவரது எல்லையற்ற பேரருட்டிறத்தை நினைந்து எழுந்த இன்ப மேலீட்டில் பாடிக்கொண்டு சென்றமை, நம்பியாரூரது வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள் பலவற்றைத் தருதலுடன், உரை யளவைக்குரிய சிறப்பியல்பு தெற்றென விளங்க நிற்றல், திருக்கயிலையில் முற்றுப்பெற்று நாயனாரது அருளாணையால் வருணனால் நிலவுலகிற் கொணர்ந்து அளிக்கப்பட்டமை முதலியனவாம். இத்திருப்பதிகம் நுதலியபொருள், இதன் வரலாற்றானே விளங்கும்.
|