பக்கம் எண் :

151
 

அவரை, வன்னிமரம் ஆகுமாறு அம்மையார் சபித்தார். பின்னர் முனிவர் அம்மையாரை வழிபட்டு அவர் அருளால் சாபநீக்கம் பெற்றனர். மூவராலும் பாடப்பெற்றது.

திருக்கோயில் பாதைக்கு இரு புறமாகக் கட்டப்பெற்றுள்ளது. மேல்புறம் சுவாமி, கீழ்புறம் அம்மன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கின்றன. சுவாமியின் முன்கோபுரம் பூர்த்தியாகவில்லை. சுவாமி கோயிலுக்கு நேர் வழியில்லை. தெற்குவாயில் வழியே சென்று பிறகு மேற்கே திரும்பவேண்டும். எதிரில் இராமர்கோயில் இருக்கின்றது. இராமன் வழிபட்டதனால் அபிராமேசர் என்று பெயர்வந்தது.

அர்த்தமண்டபத்தில் நிலவறை உண்டு. அச்சுதராயர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவர் திருப்பணிசெய்தாராம். அம்மன் கோயில் உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதற்குத்தான் பிராகாரமும் கோபுரமும் உண்டு.

இரட்டைப் புலவர்கள் இவ்வூர் இறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர். புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் இவ்வூரினர். அவருடைய சமாதி ஊரின்புறத்தே இருக்கின்றது.

இவ்வூருக்கு, சம்பந்தர் பதிகங்கள் இரண்டு. அப்பர் பதிகங்கள் இரண்டு. சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் கோப்பரகேசரிவர்மன் (முதல் பராந்தகன்) முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திர சோழன் (கங்கைகொண்ட சோழன்). வீர ராஜேந்திரன், முதற் குலோத்துங்கன்.

"பூமேவு வளர்திருப் பொன்மார்வு புணர
நாமேவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப"

என்னும் தொடக்கமுள்ள மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் முதலானோர் காலங்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருவாமாத்தூர் உடைய பெருமானடிகள், திருவாமாத்தூர் ஆள்வார், திருவாமாத்தூர் ஆளுடையார் அழகியதேவர், திருவாமாத்தூர் உடைய பரமசுவாமி என்னும் பெயர்களால் குறிக்கப்படுகின்றார்.1