அம்பர்நாடு, குறும்பூர்நாடு, மருகல்நாடு, பாம்பூர்நாடு, தென்கரைத் திரைமூர்நாடு, திருநறையூர்நாடு, திருவழுந்தூர்நாடு, வெண்ணாடு, விளநாடு, பேராவூர்நாடு என்னும் பிரிவுகளை உடையதாய் இருந்தது. திருவாவடுதுறையைத் தன்னகத்துக்கொண்ட நாடு: திருஆவடுதுறை உய்யக்கொண்டார் வளநாட்டின் பிரிவுகளில் ஒன்றாய தென்கரைத் திரைமூர்நாட்டிற்கு உட்பட்டதாகும். நெற்குப்பை, சாத்தனூர், நடார், நல்லுச்சேரி, திருக்குரங்காடுதுறை மகேந்திரமங்கலம் என்னும் ஊர்கள் இந்நாட்டிற்கு உட்பட்ட சில ஊர்கள் எனக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. பிற செய்திகள்: அர்த்தமண்டபத்தின் வடபுறச் சுவரில் அதாவது துர்க்கா பரமேசுவரியின் திருமேனிக்குக் கிழக்குப் பக்கமாக உள்ளதும், சில பகுதிகளை சுவரில் வைத்துக் கட்டப்பெற்றதும் ஆகிய கல்வெட்டில் கோப்பரகேசரிபன்மரான உடையார் காவேரிகரைகண்ட கரிகால சோழ தேவர் என்று ஒரு சோழ அரசர் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கல்வெட்டின் தொடக்கத்தில் "தேவற்குயாண்டு நாலாவது தென்கரை திருவழுந்தூர் நாட்டு 'வாய்தலைப்படி குலையரையரோம்' உடையார் திருவாவடுதுறை உடையார்க்கு நாங்கள் கைதீட்டு இட்டுக் கொடுத்த பரிசாவது" எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதில் 'வாய் தலைப்படி குலையரையர்' என்பவர் ஒரு சபையினர் என்பது உறுதி, அவர்கள் எவ்வேலையைக் கண்காணித்துவந்தனர் என்பது புலப்படவில்லை. இக்கோயிலிலுள்ள பொன் ஆபரணங்கள் குடிஞைக் கல்லாலும், வெண்கல உருக்கள் வெள்ளிக் கோலாலும், பித்தளை உருக்கள் மாண்டினாலும் நிறுக்கபெற்று வந்தன. "வெள்ளிக் கோலால் நிறை ஆயிரத்து நாநூற்று இருபத்து முப்பலவரை, மேற்படி கோலால் நிறை தொளாயிரத்திருபத்தைம்பலநே கைசு (கஃசு)" என்னும் தொடர்களால் அக்காலத்தில் பலம் தான் உயர்ந்த நிறுத்தல் அளவை என்பதும் கஃசுதான் மிகச் சிறியது என்பதும் பெறப்படுகின்றன. கோயில்காரியங்களின் பொருட்டு ஊர்ச்சபையார், திருவாவடுதுறை உடையார் கோயில் வட பக்கத்து உலகளந்தான் என்று பேர் கூவப்பட்ட மாடத்தில் கூட்டங் குறைவறக் கூடியிருந்தும், சங்கர தேவன் மண்டபத்தே கூட்டங் குறைவறக் கூடியிருந்தும் கவனித்து வந்தனர்.
|