வழிபட்ட புண்ணியத்தின் பயனாய் அரசனாய்ப் பிறந்த கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. வெளிப்புறத்து மதிலுக்குத் திருநீறு இட்டான் திருமதில் என்று பெயர். இறைவர் சித்தராய் எழுந்தருளித் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து எடுப்பித்த காரணத்தால் அம்மதில் அப்பெயர் பெற்றது. திருக்கயிலையிலிருந்து எழுந்தருளி இறைவி இங்குத் தவஞ்செய்து ஞானோபதேசம் பெற்ற காரணத்தால் ஞானஸ்தலம் எனவும் இது வழங்கப்படும் உறையூர்ச்சோழர் மணியாரம் தரித்துக்கொண்டு காவிரியில் நீராடினார். அது ஆற்றில் விழுந்துவிட்டது, உடனே அவர் "சிவபெருமானே கொண்டருளும்" என வேண்டினார். அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில் புக, அதனை இறைவருக்கு அபிடேகிக்கும் போது அவர் அதனை ஆரமாக ஏற்றுக்கொண்டு சோழனுக்கு அருள் புரிந்ததும் இப்பதியேயாகும். இச்செய்தியை, சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர்ப்பதிகத்தில், "தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்" எனவும், திருஞானசம்பந்தப்பெருமான், "ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே" எனவும் சேக்கிழார்பெருமான், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில், "வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக் கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்" எனவும், போற்றுவாராயினர். தலத்தைப் பற்றிய நூல்கள் : கச்சியப்பமுனிவர் இத்தல புராணத்தையும் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அகிலாண்ட
|