பக்கம் எண் :

189
 

இவர்க்கு இவர் நின்ற இடத்தே காட்டிக் குடுக்கையில்" என்று தொடங்கும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். (இக்கல்வெட்டு மகா மண்டபம் அர்த்த மண்டபம் இவைகளின் தென்புறச் சுவர்களில் இருக்கின்றது.)

கோபுரத்தைக் கடடியவர்: இக்கோயிலின் முன்னுள்ள மூன்றுநிலைக் கோபுரத்தைக் கட்டியவர் தொண்டைமண்டலத்துக் குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியாராவர். இச்செய்தியை, "தொண்டை மண்டலம் குன்றத்தூர் நாராயண முதலியார் புத்திரன் வயிர முதலியார் திருக்கோபுரம்" என்னும் அக்கோபுரக் கல்வெட்டால் அறியலாம். (இது கோபுர வாசலின் தென்பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: இத்திருக்கோயிலில் திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்தவர் கண்ணமங்கல முடையாரான வீமப் பிள்ளையின் பாரியாரும், மிழலை நாட்டுக் கோனாரான புலியூருடையார் ஆதித்த தேவரின் மகளாரும் ஆவர். இவ்வம்மையாரின் திருப்பெயர் கல்வெட்டில் சிதைந்து விட்டது.

ஆலாலசுந்தரன் குகை: மேற்குறித்த அம்மையார், இவ்வெதிர்கொள்பாடியில் கீழைத்திருவீதியில் பூண்டி உடையார் புகலிவேந்தர் இருந்த ஆலாலசுந்தரன் குகையை எடுத்துக் கட்டியுள்ளார். எனவே, இவ்வூரில் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பெயரால் திருமடம் இருந்த செய்தி பெறப்படுகின்றது.

திருக்குளத்தில் உள்ள கல்வெட்டு: இக்கோயிலுக்கு எதிரில் உள்ள திருக்குளத்தின் கீழ்க்கரையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு கல்லில் காணப்பெறும் 'ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜந்திருமங்கலத்து உடையார் விக்கிரமசோளீஸ்வரமுடையார் திருநாமத்துக்காணி' என்னும் கல்வெட்டால் இத்திருக்குளம் இராஜராஜன் திருமங்கலத்து விக்கிரம சோழீச்சரமுடையார்க்கு உரிமையுடையது என்று பெறப்படுகின்றது.

இந்த எதிர்கொள்பாடிக்கு வடக்கே, சுமார் மூன்று கி. மீ. தூரத்தில் திருமங்கலம் என்ற ஓர் ஊர் இருக்கின்றது. அவ்வூர்ச் சிவன்கோயில் கல்வெட்டுக்கள் அவ்வூரின் பெயர் இராஜராஜன் திருமங்கலம் என்றும், சிவபெருமானின் திருப்பெயர் விக்கிரமசோழீச்சரமுடையார் என்றும் அறிவிக்கின்றன. எனவே எதிர்கொள்பாடியில் உள்ள இத்திருக்குளம் திருமங்கலத்துச்