பக்கம் எண் :

193
 

கடலரசன் இங்குவந்து ஐயாறப்பரைப் பூசித்துப் பேறுபெற்றான். "ஆழிவலவனின்றேத்தும்" என்னும் இவ்வூர்த் தேவாரப்பகுதி இதற்குச் சான்றாகும். இலக்குமியால் பூசிக்கப்பெற்றது. இலக்குமிக்கு இரண்டாம் பிராகாரத்தில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக்கிழமைதோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது. வடகயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அப்பர் பெருமானுக்குக் காட்டியருளிய காட்சியை உணர்த்தும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற்கோயில், பெரியபுறத் திருச்சுற்றாலையின் தென்பால் (மூன்றாம் தெற்குப் பிராகாரத்தில்) இருக்கின்றது. அங்கு இறைவர் மணவாளக் கோலத்தோடு, சக்தியும் சிவமுமாக வீற்றிருந்து அருளுகின்றார். அப்பர் பெருமானின் அழகு திகழும் பிரதிமையும் அங்கு இருக்கின்றது.

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கியபோது எதிரே தோன்றிய திருவையாற்றையும் வணங்க விரும்பினர். அப்பொழுது காவிரியில் வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தமையால் அக்கரையிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் "ஐயாறுடைய அடிகளோ" என்று திருப்பதிகம் பாடிய அளவில், வந்து மீளுமளவும் காவிரியை வழிவிடச்செய்த பெருமையையுடையது இத்தலம். தம்மை வழிபட்டு வந்த ஓர் அந்தணச் சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட காரணம்பற்றி ஆட்கொண்டார் என்னும் பெயருடையாரது திருமேனி தெற்குகோபுரவாயிலின் மேல்பால் இருக்கின்றது. அவருக்கு அருகில் தென்மேற்கு மூலையில் இருப்பவர் ஓலம் இட்ட பிள்ளையார் ஆவர். ஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக்குழி ஒன்று இருக்கிறது. அதில் மக்கள் குங்கிலியத்தை இட்டு வழிபடுகின்றனர். இத்தலத்தே இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். இச்செய்தியை "எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட" எனச் சம்பந்தரும், "வாலியார் வணங்கிய ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேன்" என அப்பர் பெருந்தகையும் அருளிச் செய்துள்ளதை இத்தலத்துத் தேவாரப்பகுதிகளால் அறியலாம்.

இறைவரைப் பூசித்த சைவர் ஒருவர் காசிக்குச் சென்று, குறிப்பிட்ட காலத்தில் வாராமையால் பூசைமுறை தவறியது. அதுபொழுது இறைவர் அச் சைவருடைய வடிவோடு இருந்து தம்மைத்தாமே பூசித்த சிறப்புடையது. இதைத்தான் "ஐயாறதனில் சைவனாகியும்" என்பார் திருவாசகத்தில். இப்பதிக்குப் பதினெட்டுத் தேவாரப்பதிகங்கள் இருக்கின்றன. திருவடிப் பெருமைகளை அப்பர்பெருமான் இருபது