பக்கம் எண் :

196
 

களுக்கும், நித்திய நைமித்தியங்களுக்கும் நிவந்தங்கள் அளிக்கப் பெற்ற செய்திகளை உணர்த்துபவையே. எனினும் எல்லாக் கல்வெட்டுக்களுமே பல அரிய வரலாற்று உண்மைகளை அறிவிப்பவை யாயும் இருக்கின்றன.

ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பல்லவ மன்னர் ஒருவரால் செய்விக்கப்பெற்ற கற்றளியை உடையதாகும். மூன்றாம் (பிராகாரத்தின்) திருச்சுற்றாலையின் கிழக்குக் கோபுரம் விக்கிரமசோழனால் கட்டப்பெற்றதாகும். இச்செய்தி "ஸ்வஸ்திஸ்ரீ இத் திருக்கோபுரம் விக்கிரமசோழனது" என்னும் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. மேலக் கோபுரவாயிலிலுள்ள அச்சுதப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டு, ஐயாறப்பர் கோயிலின் மேலக் கோபுரமும், முதல் பிராகாரமும், திருநடமாளிகைப் பத்தியும், ஐந்தாம்பிராகாரத்தின் தெற்குவாசலில் உள்ள சூரியபுட்கரிணியெனும் திருக்குளமும், மூன்றாம் பிராகாரத்தில் தெற்குக்கோபுரமும் ஆனையப்பபிள்ளை, அவர் தம்பி வைத்தியநாதர் என்போரால் எடுப்பிக்கப்பெற்றவை என்கிறது.

இத்திருப்பணிகளைப் புரிந்த ஆனையப்பப்பிள்ளையும் அவர் தம்பியும் மருதூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தஞ்சாவூர் ஐயன்வாசல் அருகில் இருந்தவர்கள். இவர்கள் உருவங்களோடு இவர்களுடைய பெற்றோர்களின் உருவங்களும் முதல் பிராகாரத்து மேற்குத் திருச்சுற்று மாளிகையில் இருந்துள்ளன. ஆனால் அவைகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டன. அந்தந்த உருவங்களின் மேலே பொறிக்கப்பெற்ற பெயர்கள் இன்றும் உள்ளன. மேலக்கோபுரக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற செய்தியை இம்முதல் பிராகாரத்தின் மேற்குத் திருச்சுற்று மாளிகையின் உள்சுவரில் பொறிக்கப் பெற்றிருக்கும் "ஈசுவரu ஆவணிt இந்தப் பிராகாரம் மருதுடையகத்தீச நயினார் புத்திரர் ஆனையப்பபிள்ளை, வயித்தியநாத அண்ணன்கள் புண்ணியம்" என்னும் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.

அச்சுதப்ப நாயக்கர் திருவரங்கம் பெரியகோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர். இரண்யகர்ப்பம் புகுந்தனர். உடைப்பெடுத்துச் சென்ற காவிரிக்கு அணைகட்டுவித்தனர். திருவையாற்றில் பூசப்படித்துறைக்குப் படிகள் அமைத்து அதற்குக் கல்யாணஸிந்து என்று பெயரிட்டுள்ளனர் என்னும் செய்திகள் பூசப்படித்துறை மண்டபத்துக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றன.