இறைவன் திருவையாறுடைய மகாதேவர், இறைவியார் உலகுடைய நாச்சியார் என்னும் பெயர்களுடன் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளனர். (திருக்காமக்கோட்டத்தை இடித்துப் புதிதாகத் தேவகோட்டைத் திருப்பணிச்செல்வர் உயர்திரு. மெய்யப்பச் செட்டியாரால் கட்டப்பெறுவதற்கு முன் இருந்த கல்வெட்டை அரசியலார் ஆண்டு அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றனர். அதில் இறைவியாரின் திருப்பெயர் உலகுடைய நாச்சியார் என்றே குறிக்கப்பெற்றுள்ளது. இப்பெயர் மறைந்துபோய், இக்காலம் அறம் வளர்த்த நாயகி என்னும் பெயர் வழங்கி வருகின்றது.) அச்சுதப்பநாயக்கர், அவர் மனைவியார் உருவங்கள் மேலக்கோபுரவாசலில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. எனினும் அவர்களின் திருவுருவங்கள் முதல் பிராகாரத்தின் மேற்குத் திருச்சுற்று மாளிகையின் உள்பக்கத்தில் நல்ல கல்லிற் செதுக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றன. பச்சையப்ப முதலியார், அவருடைய இருமனைவியர் இவர்களின் உருவங்கள் பச்சையப்பன் மண்டபத்தூண்களில் செதுக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றன. சோமாஸ்கந்தர் திருக்கோயில் சோழமன்னருடைய திருப்பணியை உடையது. இக்கோயில் கொடுங்கைவேலைகள் போற்றற்குரியன. வீரசரவண உடையார் காலத்தில் (சகாப்தம் 1303 - கி. பி. 1381) பாண்டிகுலாசனி வளநாட்டுச் செந்தலை - கருப்பூர் கச்சிவீரப் பெருமான் மகன், நேர் குலைந்து இற்றுப் போன இத்திருக்கோயில் திருமண்டப மதிலைக் கட்டியுள்ளான். திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான் நூற்றெட்டு வேலி நிலத்தைக் கொடுத்துள்ளான். கோச்சடைய பன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியதேவர் காலத்தில் திருவையாறுடைய நாயனார்க்குச் சுத்தமல்லி வளநாட்டுப் பாம்புணிக்கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டனான சேரகோன் ஆறேமாக்காணிசொச்சம் நிலத்தைத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்துள்ளான். இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக்
|