பக்கம் எண் :

198
 

கல்வெட்டில், இராஜராஜ வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.

பொய்கைநாடு என்பது திருவையாற்றிலிருந்து கீழப்பழுவூருக்குப் போகும் பெருவழிக்கு மேற்கும் காவிரிக்கு வடக்குமாகிய பிரதேசமாகும். இப்பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளானே ஸ்ரீராஜராஜேச்சரம் உடையார்க்கு ஸ்ரீகாரியம் செய்தவன் ஆவன். அக்கோயிலில் நம்பி ஆரூரனார், நங்கை பரவையார் முதலானோர்ப் பிரதிமங்களை எழுந்தருளுவித்தவனும் இவனேயாவன். பொய்கை நாட்டுத் தலைநகராகிய பொய்கை எது என்று அறிந்து கோடற்கு இல்லை. இப்பொய்கை ஒரு வைப்புத்தலம் என்பதை, திருநாவுக்கரசர் பெருமானுடைய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தின் இறுதிப் பாட்டுப் புலப்படுத்துகின்றது. திருப்பழனம் சிவன் கோயிலில் உள்ள "ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு எ ஆவது ராஜராஜவளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவாமியூர் உடையார் திருப்புகலீசுவரமுடையார்க்கு" எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதியால் இப்பொய்கைநாடு தென்பொய்கைநாடு வட பொய்கைநாடு என்னும் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும், திருவாமியூர் - திருப்புகலீஸ்வரம் இப்பொய்கைநாட்டிற்குட்பட்டவை என்றும் பெறப்படுகின்றன.

தென்கயிலைக்கோயில்: இத்திருக்கோயிலில் உள்ள ஏழு கல்வெட்டுக்களுள் ஒன்று கிருஷ்ணராஜ உடையாரைப்பற்றியது. ஏனையவைகளெல்லாம் சோழநாட்டை ஆண்ட பிற்காலத்துச் சோழ மன்னர்கள் காலத்தனவாகும். இந்தச் சோழ மன்னர்கள் கல்வெட்டுக்களிலும், கருப்பஇல்லின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள "திருமன்னி வளர இருநிலமடந்தையும்" எனத் தொடங்கப்பெறும் கோப்பரகேசரி இராஜேந்திரசோழதேவரின் (கங்கைகொண்டசோழன்) முப்பத்தொன்றாம் ஆண்டில் பொறிக்கப்பெற்றதே பழமையானதாகும். அக்கல்வெட்டிலுள்ள "வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்று நம்பிராட்டியார் பஞ்சவன் மாதேவி . . . . . யாற்று எடுப்பித்தருளுகின்ற திருக்கற்றளி தென் கயிலாயமுடையார் கோயில்" என்னும் பகுதியால், முதலாம் இராஜேந்திரசோழதேவரின் மனைவியாராகிய பஞ்சவன் மாதேவி யாரால் இக்கோயில் கட்டப்பெற்றதென்று தெரிகின்றது. அம் முதல் இராஜேந்திர சோழதேவர் கி. பி. 1014 முதல் 1042 வரை ஆண்டவராவார். அவரது ஆட்சியாண்டு முப்பத்தொன்றில் இக்கோயில் கட்டப்பெற்றதென்று பெறப்படுகின்றமையால் இக்கற்றளி எடுப்பிக்கப் பெற்று