பக்கம் எண் :

199
 

இற்றைக்கு 952 ஆண்டுகள் ஆகின்றன.

இறைவர் திருப்பெயர் பஞ்சநதிவாணன் என்றும் இறைவி திருப்பெயர் அஞ்சலை என்றும் பெறப்படுகின்றன. இச்செய்தியை அர்த்தமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டுப் பாடல் அறிவிக்கின்றது.

முதலாம் இராஜேந்திர சோழதேவரின் இரண்டாம் மகனாகிய விஜயராஜேந்திரன் கல்வெட்டால், அம்மன்னனது மனைவியாரின் திருப்பெயர் திரைலோக்கியமுடையார் என்பதும், அக்கோயிலில் ஆடவல்லார் இவர்தம் பிராட்டியார் இவர்களுடைய திருமேனிகள் இருந்தன என்பதும், ஆடவல்லார்க்குத் திருக்கழுத்து, திருக்கை, திருவடி இவைகளுக்குச் சாத்தியருளப்பெற்ற அணிகலன்கள் முறையே சண்பங்காறை, திருக்கைக்காறை, திருவடிக்காறை என்ற பெயர்களுடன் வழங்கிவந்தன என்பதும், இவர்தம் பிராட்டியார்க்கு இக்காலம்போல் அல்லாமல் ஒற்றைத்தாலியே சாத்தியருளப்பெற்று வந்ததென்பதும், அவர் தம் திருக்காதணியின் பெயர் காறைகண்டி என்பதும், அக்காலம் பொன், மாணிக்கம், வயிரம் இவைகள் குடிஞைக்கல் என்னும் அளவையால் நிறுக்கப்பெற்று வந்தன என்பதும் வெளியாகின்றன.

மகாமண்டபத்தின் மேற்குப்புறச்சுவரில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவர் இவர்களின் கல்வெட்டுக்கள் கோயிலில் நுந்தாவிளக்குக்களும் சந்திவிளக்குக்களும் வைப்பதற்குக் கொடுக்கப்பட்ட நிபந்தங்களைத் தெரிவிக்கின்றன.

இத்திருக்கோயிலின் திருச்சுற்றுமாளிகை கிருஷ்ணராஜ உடையாரால் எடுப்பிக்கப்பெற்றதாகும். இச்செய்தி கீழைத்திருச்சுற்று மாளிகையில் தென்பாலுள்ள கடைசித் தூணுக்கு அடுத்த வடபாலுள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள "ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் கிருஷ்ணராஜ உடையார்" என்னும் கல்வெட்டால் புலப்படுகின்றது.

ஒலோகமாதேவீச்சரம்: இத் திருக்கோயிலைக் கட்டியவர் இஞ்சிசூழ்தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழமண்டலத்தைக் கி. பி. 985 முதல் கி. பி. 1014 வரை ஆண்ட முதல் இராஜராஜ மன்னனுடைய முதல் மனைவியாராகிய ஒலோகமா தேவியாராவர். இவ்வம்மையாரால் கட்டப்பெற்றமையின் இது ஒலோகமாதேவீச்சரம்