என்று பெயர்பெற்றது. இச்செய்தி "ஸ்ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசத்திவிடங்கியாரான ஒலோகமாதேவியார் வடகரை ராசேந்திரஸிம்ஹ வளநாட்டுத் தேவதான திருவையாற்றுப்பால் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதேவீச்சரமுடையார்க்கு" என்னும் இக்கோயிற் கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது. இக்கோயிலில் முதல் இராஜராஜன், அவன் மகனாகிய முதல் இராஜேந்திரன், அவன் மகனாகிய முதல் இராஜாதிராஜன் என்னும் மூன்று சோழமன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் முதலாம் இராஜராஜன் அரியணையேறிய இருபத்தொன்றாம் ஆண்டுக் கல்வெட்டே பழமையானது. அதிலேதான் ஒலோகமாதேவியார் இத்திருக்கோயிலைக் கட்டிய செய்தி குறிக்கப்பெற்றுள்ளது. அந்த முதலாம் இராஜராஜசோழன் கி. பி. 985 இல் பட்டம் எய்தியவன் ஆவன். அவன் ஆட்சி ஆண்டாகிய கி. பி. 985 உடன் இருபத்தொன்றைக் கூட்ட கி. பி. 1006 ஆகும். எனவே இற்றைக்கு (1954 - 1006) 948 ஆண்டுகளுக்குமுன் இத்திருக்கோயில் கட்டப்பெற்றதாகும். இத்திருக்கோயிலில் இவ்வம்மையார் ஒலோகமாதேவீச்சரமுடையார், ஒலோகவிடங்கதேவர், அவர்தம் பிராட்டியார், பிள்ளையார், முருகர், ஆடவல்லார், சண்டேசுவரர் இவர்களின் திருமேனிகளை எழுந்தருளுவித்துள்ளார். அவர்களுள் ஒலோகமாதேவீச்சரமுடையார் என்பது கருப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருப்பெயராகும். ஒலோகவிடங்கதேவர், ஆடவல்லார் என்பன முறையே தியாகராசப்பெருமான், நடராசப் பெருமான் இவர்களுடைய திருப்பெயர்களாகும். இக்கோயிற் சிவபெருமானுக்கு நான்குகால பூசைகள் நடைபெற்று வந்தன. நெய்கொண்டு நொந்தாவிளக்குக்களும் சந்தி விளக்குகளும் பல ஏற்றப்பட்டு வந்தன. பருப்பமுது, கறியமுது, போனகம், பொறிகறியமுது, தயிரமுது, சர்க்கரையமுது, அப்பமுது இவைகள்கொண்டு திருவமுது செய்விக்கப்பட்டன. இவ்வம்மையார் தம் கணவன் பிறந்த நாளாகிய சதயத் திருவிழாப் பன்னிரண்டும், சித்திரைப்பெருந்திருவிழா ஒன்றும் ஆகப் பதின்மூன்று திருவிழாக்களையும் இத்தலத்து நடத்துவித்தார். இவ்வம்மையாரும் இவர் குடும்பத்தார்களும் கொடுத்துள்ள பொன்னாற்செய்து மணிகள் பதித்த அணிகலன்களுக்கும் வெள்ளியாற்செய்த பரிகலங்களுக்கும் அளவில்லை. அணிகலன்களையும்
|