பெருமானையும், திருத்துருத்திப் பெருமானையும் உடன்வைத்துப் பாடிய திருப்பதிகம் "மூப்பதுமில்லை பிறப்பதுமில்லை" (தி. 7 ப. 18) என்பது. இதில் இறைவன் பிறப்பு இறப்பு மூப்பு இல்லாதவன். இவனுக்கு ஊர் வேள்விக்குடியும் துருத்தியும். அரைமேல் கட்டியதோ பாம்பு. இவற்றையெல்லாம் முன்பே அறிந்திருந்தால் இவர்க்கு நாம் ஆட்பட்டிருக்கமாட்டோம் என்று மேலோட்டமாகக் காண்பார்க்கு ஒரு பொருள் தோன்றும். இப்படிப்பட்ட இறைத்தன்மை உடைமையை நாம் அறிந்தோமானால் இவருக்கு நாம் ஆட்படாமல் இருக்கமுடியுமோ என்ற உண்மைப்பொருளையும் காணலாம். இப்படிப் பாடுவது இவருக்குக் கைவந்த கலை என்பதைப் பல இடத்தும் காணலாம். ஆட்படோமே என்பதில் ஏகாரத்தை அசையாகக் கொண்டால் ஆட்படோம் என்று பொருள் தரும். ஏகாரத்தை வினாவாகக் கொண்டால் ஆட்படாமல் இருப்போமோ என்னும் வினாப்பொருளைத் தரும். பாடலைக் காண்போம். மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லைச் சேர்ப்பது காட்டகத்தூ ரிலும் ஆகச் சிந்திக்கின் அல்லால் காப்பது வேள்விக்குடி தண்துருத்தி எங்கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே. (தி. 7 ப. 18 பா. 1) இப்பதிகம் நாலாம் பாடலில் "மானைத்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு ஆனைத்தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாமிவர்க்கு ஆட்படோமே" (தி. 7 ப. 18 பா. 4) என்றமையால் புலித்தோலேயன்றி மான்தோலும் பெருமான் உடுத்துவர் என்பது இதனால் தெளிவாகிறது. ஆனால் அருகிய வழக்கு. ஆள் இல்லை எம்பெருமான் : திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர். திருவாரூரில் எழுந்தருளியிருந்தமையைக் கேள்வியுற்ற குண்டையூர்க் கிழார் என்னும் சிவனடியார் நாள்தோறும் சுந்தரர் மனைக்கு நெல் பருப்பு முதலிய பொருள்களை அனுப்பி வந்தார். மழையின்மையால் பொருள் முட்டுப்பாடு நேர்ந்தது. நெல் அனுப்ப இயலாமையால் மனம் தளர்ந்து உணவுகொள்ளாமல் இரவு துயில் கொள்ள, பெருமான் அருளால் நெல் மலையாகக் குண்டையூர் முழுதும் நிரம்பியது. இதனை அவர் ஆரூரரிடம் அறிவித்து நெல் மலையாக இருப்பதால் எடுத்துப்போக ஆட்கள் வேண்டும் என்று தெரிவிக்க, சுந்தரரும் குண்டையூருக்கு அருகில் உள்ள திருக்கோளிலித் தலத்துப் பெருமானைப் போற்றி "நீளநினைந்து" என்ற பதிகம் பாடினார். நெல் மலை பூதகணங்ளால் திருவாரூர் சேர்ந்தது. சுந்தரர்
|