பக்கம் எண் :

204
 

மகாராயர் முதலானோர் காலங்களிலும், சம்புவராய மன்னர்களில் சகல புவன சக்கரவர்த்தி ராஜ நாராயண சம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர்: இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் மகாதேவப்பட்டாரர், திருவொற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடைய நாயனார், படம்பக்க நாயகதேவர், என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

இவற்றுள் படம்பக்க நாயக தேவர் என்னும் பெயர், திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதி ராஜ தேவரின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டிலும், மகாதேவ பட்டாரர் என்னும் பெயர் தெள்ளாறெறிந்த நந்திபோத்தரையர் கல்வெட்டிலும் காணப்படுகின்றன.

திருவிழா :

இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவும், ஆனித் திருவிழாவும், மாசி மகவிழாவும் மிகச் சிறப்பாகநடைபெற்று வந்தன. பங்குனி உத்திரத்திருவிழாவின் ஆறாம் நாளில் படம்பக்க நாயக தேவரைத் திருமகிழ மரத்தின்கீழ் திருவோலக்கஞ் செய்தருளுவித்து ஆளுடைய நம்பியின் ஸ்ரீபுராணத்தைக் கேட்டருளச் செய்வது வழக்கம்.

ஆனித்திருவிழாவின் ஆறாம் நாளில் மூன்றாங் குலோத்துங்க சோழன் இக்கோயிலிலுள்ள இராஜராஜன் திருமண்டபத்தில் திருவோலக்கஞ் செய்தருளி விநோதம் கொண்டருளினான் என்று அம் மன்னனது 19 -ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது. மாசி மகவிழாவின் பொருட்டு சிறுவப்பேடாகிய மும்முடிச் சோழ நல்லூர்ப் புறவுவரித்திணைக் களத்துக் கணக்காளன் நிவந்தம் அளித்திருந்தான். இந்நிவந்தம் அளிக்கப்பெற்ற காலம் மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.

மண்டபங்கள் :

இக்கோயிலில் இராஜராஜ மண்டபம் என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தில் இருந்து கோயில் கருமங்களை ஆராய்ந்து வந்தனர்.