குலோத்துங்கசோழன் மண்டபம் : இதுவும் கோயிலுக்குள் இருந்த ஒரு மண்டபமாகும். இதில் நாடோறும் ஐம்பது அடியார்களுக்கு அன்னமளிக்கப் பெற்று வந்தது. இதன் பொருட்டுப் பையூர்க் கோட்டத்து அசூரருக்கு அருகில் உள்ள ஊராகிய பவனம்பாக்கத்திற்கு எழுத்தறிவார் நல்லூர் என்னும் பெயரை இட்டு அதில் ஒரு பகுதியை அன்னம் அளிப்பதற்கு நிவந்தமாக முதற்குலோத்துங்க சோழன் அளித்திருந்தான். இந்த ஏற்பாட்டை முதற்குலோத்துங்க சோழன் தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து செய்தருளினான். வியாகரணதான வியாக்கியான மண்டபம் : இதுவும் கோயிலுக்குள் இருந்த மண்டபமாகும். இது சித்தரசன் பொருட்டு துர்க்கையாண்டி நாயக்கனால் கட்டப் பெற்றதாகும். இம்மண்டபத்திற்கும் மற்றுமுள்ள திருப்பணிகளுக்கும் உடலாக ஒற்றியூர் வடகரை, தென்கரையில் பொன்வரி வகுப்பால் உள்ள மாடையைப் புழல்கோட்டத்து நாட்டவர் அளித்துள்ளனர். மண்ணைக் கொண்ட சோழன் : இப்பெயருள்ள மண்டபம் ஒன்று இக்கோயிலில் இருந்தது. வளவன் மூவேந்தவேளார், விக்கிரமசிங்க மூவேந்த வேளார் என்னும் இரண்டு அதிகாரிகள் இம்மண்டபத்திலிருந்து கோயில் சம்பந்தமான ஒரு வழக்கை விசாரித்ததாக முதலாம் இராஜாதிராஜதேவரின் 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. திருமடங்கள் : இவ்வூரில் சதுரானன பண்டிதற்குத் திருமடம் ஒன்று இருந்தது. அதற்குத் திருமயானமடம் என்று பெயர் வைக்கப்பெற்றிருந்தது. இச்செய்தி முதலாம் இராஜேந்திர சோழதேவரின் 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. குலோத்துங்கசோழன் மடம் : இது கோயிலுக்குள் இருந்தது. இச்செய்தி முதற்குலோத்துங்க சோழன் கல்வெட்டில் கூறப்பெற்றுள்ளது.
|