பக்கம் எண் :

207
 

எறிபடைச்சோழன், உத்தமசோழன் எனவும் முதற்குலோத்துங்க சோழன் ஜெயதரன் எனவும், மூன்றாங்குலோத்துங்க சோழதேவர், வீரராஜேந்திர சோழதேவர், உலகுய்யவந்த பெருமாள், கோனேரின்மை கொண்டான் எனவும் இக்கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுள்ளனர்.

ஒற்றியூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு :

இவ்வூர், கங்கை கொண்ட சோழன் காலம் முதல், முதற் குலோத்துங்க சோழன் காலம் வரையில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல் நாட்டில் உள்ள ஊர்களில் ஒன்றாய் இருந்தது. முதற்குலோத்துங்கன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து, இராஜேந்திர சோழவள நாட்டுப் புழல்நாட்டு ஊர்களில் ஒன்றாய் விளங்கிற்று.

பிறசெய்திகள் :

முதலாம் இராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் மார்கழித் திருவாதிரையாகும். இச்செய்தி அம்மன்னனது 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெறும். "திருவொற்றியூருடைய மகா தேவர்க்கு ராஜேந்திரசோழர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடியருள வேண்டுமிடத்து திருவொற்றியூர் திருமயான மடமுடைய சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்தகாசு நூற்றைம்பது" கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.

இக்கோயிலில் வீரராஜேந்திரன் திருப்பள்ளியெழுச்சி, திரிபுவன வீரதேவன் சந்தி இவைகளுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றிருந்தன. இவற்றுள் திரிபுவன வீரதேவன் என்பது மூன்றாங் குலோத்துங்க சோழனுக்குரிய சிறப்புப் பெயராகும். அவன் பேரால் ஏற்படுத்தப்பெற்ற இச்சந்திக்கு குலோத்துங்க சோழவள நாடான புலியூர்க் கோட்டத்தில் சிவபாத சேகரநல்லூராகிய குளப்பாக்கத்தில் நூறுவேலி நிலம் விடப்பெற்றிருந்தது. இவ்வூரில் சாலியர்கள் வசித்து வந்த தெருக்கள், ஜெயசிங்ககுல காலப்பெருந்தெரு என்றும், இராஜராஜப்பெருந்தெரு என்றும், மன்றாடிகள் வசித்துவந்த தெருக்கள் திரிபுவனச் சுந்தரச்சேரி, திரிபுவனநகரத்தெரு என்னும் பெயர்களைப் பெற்றிருந்தன. மன்றாடிகள் என்பார் திருவிளக்குக் குடிகளாவார். இவர்கள் நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவாமூவாப் பசுக்களையோ அல்லது ஆடுகளையோபெற்று, உரிய திட்டப்படி, தவறாது நெய் அளப்போராவர். இக்கோயிலில் உத்தம