பக்கம் எண் :

208
 

சோழதேவர் காலத்தில் கவரிப்பிணாக்கள் இருபத்து நால்வரும், காளம் ஊதுபவர் எண்மரும் இருந்தனர்.

இக்கோயிலிலுள்ள கிரந்தக் கல்வெட்டுக்கள், ஒற்றியூரை ஆதிபுரி என்றும், இறைவரை, ஆதிபுரீஸ்வரர் என்றும் கூறுகின்றன. கங்க பல்லவவம்சத்து விஜயகம்பவர்மனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ஒற்றியூரில் நிரஞ்சனீஸ்வரத்து மகாதேவருக்கு நிரஞ்சன குரவரால் கோயில் கட்டப்பெற்ற செய்தியை உணர்த்துகின்றது. சோழ நாட்டுத் தென்கரை நாட்டு, பொய்யில் கூற்றத்து சிறுகுளத்தூருடையான் மாறன் செம்பியன் சோழியவரையன், சீட்புலியை யெறிந்து நெல்லூரை அழித்துத் திரும்பியவன் திரு ஒற்றியூர் மகாதேவர்க்குத் திருநுந்தா விளக்கு எரிப்பதன் பொருட்டு 96 சாவாமூவாப் பேராடுகளை அளித்தான் என்பதை மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மனின் முப்பத்து நான்காவது ஆண்டுக் கல்வெட்டு்த் தெரிவிக்கின்றது.

15. திருஓணகாந்தன்றளி

ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது என்பர்.

காஞ்சீபுரம் ஏகம்பநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கே இரண்டு திருக்கோயில்கள் தனித்தனிப் பிரகாரத்தோடு இருக்கின்றன. இங்குச் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளிப் பதிகம்பாடிப் பொன்பெற்றார்.

இறைவர் :- ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்.

இறைவி :- காமாட்சியம்மை.

16. திருக்கச்சி அநேகதங்காவதம்

காஞ்சீபுரத்தின் வடமேற்கில் கழனி வெளி மத்தியில் இருக்கிறது.

திருக்கச்சியிலுள்ள (அநேகதம்) விநாயகர் பூசித்த தலம் எனப் பொருள்படும் என்பர் கயப்பாக்கம் திரு. சதாசிவச் செட்டியார் பி.ஏ.