2-5. கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. சென்னை, செங்கற்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், வேலூர் முதலிய பல நகரங்களிலிருந்தும் காஞ்சிபுரம் வரப் பேருந்துகள் உள்ளன. இறைவர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலையினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம் பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் : ஏலவார்குழலி, காமாட்சியம்மை. விநாயகர்பெயர்: விகடசக்கர விநாயகர். இவர் தெற்குத் திருவாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன் புறத்தில் எழுந்தருளியிருக்கின்றார். தீர்த்தம்: கம்பைமாநதி; சிவகங்கை என்பன. தலப்பெருமை: இது முத்திதரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம். க்ஷேத்திர வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், இவர்கள் அருள்பெற்ற பதி. இதில் பிரமா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன. இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை மூவராலும் பாடப் பெற்றவை. இவ்வூரில் (காஞ்சிபுரத்தில்) கச்சியேகம்பத்துடன் கச்சிமேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சிமயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.
|