இக்கோயிலின் வெளிமதில் கி.பி. 1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாம் சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது. திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப் பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப் பற்றிய நூல்களாகும். கல்வெட்டு : 1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி. பி. 1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்II பிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது. 2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி. பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன. 3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. 4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி. பி. 1469) ஏகம்பர்
|