சக்கரவர்த்தி இராச நாராயண மல்லிநாதன் சம்புவராயரின் 16ஆம் ஆட்சி ஆண்டிலும், விசயநகர வேந்தர்களில், மகா மண்டலேசுவரன் சதாசிவ தேவ மகாராயர் (சகம் 1484) காலத்திலும், பல்லவ மன்னர்களில், தந்திவிக்கிரமவர்மன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளில் இறைவரின் திருப்பெயர் திருமேற்றளி உடைய நாயனார் என்றும், இறைவரின் திருக்கோயில் திருமேற்றளித் திருக்கோயில் என்றும் குறிக்கப் பெற்றுள்ளன. இராசநாராயணமல்லிநாதன் சம்புவராயரின் கல்வெட்டு, எயிற்கோட்டத்துத் தேவதானம் நந்தவன்சுதர்விளாகம் என்னும் ஊரில் இருவேலி நிலத்தைத் திருமேற்றளி உடைய நாயனார்க்குக் கொடுத்ததையும், சதாசிவ தேவமகாராயர் கல்வெட்டு, தறி ஒன்றுக்கு ஐந்தரை பணத்தைச் செங்குந்தர்களிடமிருந்து வசூலித்து இறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கும் விளக்குக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, கொண்ட மய்யராசையா என்பவர் கட்டளையிட்டதையும், தந்திவிக்கரம வர்மன் கல்வெட்டு, ஒரு முத்தரையர் திருமேற்றளிக் கோயிலுக்கு அறச் செயல்கள் புரிந்ததையும், கோயிலைச் சார்ந்து திருமடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகின்றன. 19. திருக்கச்சூர் ஆலக்கோயில் திருமால் அமுதம்வேண்டி ஆமையாயிருந்து பூசித்த காரணத்தாலும், ஆலமரம் இத்தலத்துக்குரிய விருட்சமாக இருத்தலாலும், இப்பெயர் பெற்றது. (கச்சபம் - ஆமை) கச்சபஊர் - கச்சூர் என்றாயது போலும் என்பர் கயப்பாக்கம் திரு. சதாசிவச் செட்டியாரவர்கள். செங்கற்பட்டுக்கு வடக்கேயுள்ள சிங்கப் பெருமாள் கோயில் தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே இரண்டு கி. மீ. தொலைவில் உள்ளது. தொண்டை நாட்டில் உள்ள தியாகராஜர் சந்நிதிகளில் இவ்வூர் ஒன்று. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கழுக்குன்றத்தினின்று, இங்கு உச்சியம் போதையில் எழுந்தருளினார்; அவருடைய பரிசனங்கள் வரக் காலந்தாழ்த்தமையால் சுந்தரமூர்த்தி நாயனார் பசியால்
|