திருக்கச்சூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. திரிபுவனச் சக்கர வர்த்தி இராஜராஜதேவரின் 14 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு, திருக்கச்சூர்க்கு நித்தவிநோத நல்லூர் என்னும் வேறு பெயரைக் குறிப்பிடுகின்றது. மூன்றாங் குலோத்துங்கசோழ தேவரது கல்வெட்டு, இத்திருக் கோயிலில் திருநாவுக்கரசு தேவரை எழுந்தருளுவித்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. அவர் எழுந்தருளுவிக்கப்பட்ட ஆண்டு, கல்வெட்டில் சிதைந்துவிட்டது. மூன்றாங் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆண்டில் நந்திவர்மன் கட்டளைப்படி, திருஆலக்கோயில் உடைய இறைவர்க்கு அறுபத்து ஏழு வேலி நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் முப்பத்தாறாம் ஆண்டில் செங்குன்ற மாகிய அருமொழிதேவ நல்லூரிலும், நிலங்கள் விடப்பட்டுள்ளன. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, தேவாரத்து ஈஸ்வர முடையார் திருக்கோயிலையும், மணற்குடி என்னும் ஊர், திருக்கச்சூர் ஆலக்கோயில் உடையார்க்குத் தேவதானமான ஊர் என்பதையும், குறிப்பிடுகின்றது. சாத்தனார் என்பவர் முத்தமிழ் ஆசிரியர் என்றும் அவரது தமிழ்ப்புலமை பெரிதும் பாராட்டத்தக்கது என்றும், அவர் வழியில் வந்த பெருநம்பி என்பவர் பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரைக் காணியாகவுடையவர் என்றும், அவர் கச்சூர்க் கடிகை (கற்றோர் அவை) யாரில் ஒருவர் என்றும் ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, எண்ணெய் வியாபாரம் செய்யும் செக்காளர்கள், காஞ்சிமகாநகரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி உடையார் கோயிலில்கூடி, திருக்கச்சூர் செக்காளர்கள், திருக்கச்சூர் கோயிலுக்குத் திருவிளக்குகளுக்கு எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்ததை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. 20. திருக்கடவூர் வீரட்டம் திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதகடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமை
|