பக்கம் எண் :

218
 

யால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று ஆயிற்று என்பர். இயமவாதனையைக் கடத்தற்கு உதவும் ஊர் என்றும் கூறுவர்.

இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 47 ஆவது ஆகும். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உளது.

இறைவர் :- அமிர்தகடேசர். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் உண்ணும் பொருட்டு இங்குக் கொண்டுவந்து வைத்த அமுதகடம் அமுதலிங்கமாகத் திருவுருவம் பெற்றமையால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவி:- அபிராமி அம்மை. தலப்பிள்ளையார் - கள்ளவாரணப்பிள்ளையார். மரம் - வில்வமரமும், சாதிமுல்லைக் கொடியும்.

தீர்த்தம் - அமிர்தபுட்கரணி, காலதீர்த்தம் முதலியன.

மூலம் + ஸ்தானம் = மூலஸ்தானம்; அது மூலட்டானம் என வருவதுபோல, வீரம் + ஸ்தானம் = வீரட்டானம் எனவரும். இத்தகைய தலங்கள் எட்டு உள்ளன. அவை.

"பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களுஞ் சூடிதன் சேவகமே."

என்னும் பாடலால் அறியத்தக்கன.

திருக்கண்டியூர் - பிரமன் தலைகளில் ஒன்றை அறுத்தது. திருக்கோவலூர் - அந்தகாசுரனைக் கொன்றது. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது, திருப்பறியலூர் - தக்கன் தலையைக் கொய்தது. திருவிற்குடி - சலந்தராசுரனைக் கொன்றது. வழுவூர் - யானையை உரித்தது. திருக்குறுக்கை - காமனை எரித்தது. திருக்கடவூர் - இயமனை உதைத்தருளியது.

இது மார்க்கண்டரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்தருளிய வீரம் நிகழ்ந்த தலமாதல் பற்றி வீரட்டானம் எனப்பெயர் பெற்றது. இச்செய்தியைக் "கரிதரு காலனைச் சாடினானும்", "மார்க்கண்டர்க்காக அன்று காலனை உதைப்பர்போலும் கடவூர் வீரட்டனாரே", "கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு" என முறையே காணப்பெறும்,