பக்கம் எண் :

219
 

சம்பந்தர், அப்பர், சுந்தரர் இவர்களின் தேவார அடிகளால் அறியலாம். அதற்கு ஏற்பக் கால சம்ஹாரமூர்த்தி தனியே எழுந்தருளியிருக்கின்றார். அவர் சந்நிதிக்கு எதிரில் அருள் பெற்ற இயமனது உருவமும் இருக்கின்றது.

பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திலும் (அருச்சனைப்படலம்.),

"கறு விவீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலம் சாத்திச்
சிறுவனுக் காயு ளீந்த சேவகப் பெருமான் மேய
அறைபுனற் பழனமன்ன மூதூர்"

எனக் கூறப்பெற்றுள்ளது.

ஏழுகன்னிகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றதலம். இப்பதியில் அவதரித்த குங்கிலியக் கலயநாயனார் வறுமையுற்ற காலத்தும், தம் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்தும், காரி நாயனார் அவதரித்து அரசனிடம் சென்று பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் புரிந்தும் வீடுபேறு அடைந்த பதி இதுவே. சைவப்பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க்கு ஒருசேர எழுந்தருளி, கூற்று அடர்த்த பொன்னடிகளைத் தொழு தேத்திக் குங்கிலியக் கலைய நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த பெருமையும் இப்பதிக்குரிய பெருஞ்சிறப்பாகும். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகங்கள் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.

இத்திருக்கோயில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடைய பரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.