திருவிழா : இக்கோயிலில் சித்திரைமாதத்தில் பெருந்திருவிழா எட்டு நாள் நடந்து வந்தது. இதன்பொருட்டுச் செலவினங்கட்கு முதலாம் இராஜேந்திரசோழதேவரின் பதினெட்டாம் ஆண்டில் இராஜராஜ மூவேந்தவேளான் நிலம் அளித்திருந்தனன். திருமடம் : இவ்வூரில் முதல் குலோத்துங்கசோழன் காலத்தில் (கி. பி. 1070 - 1120) மார்க்கண்டேயர் மடம் ஒன்று இருந்தது. அம்மடத்தில் வேதம் வல்ல சிவயோகிகள் பதின்மருக்கு உணவு அளிக்கும் பொருட்டு மடப்புறமாக ஒன்றேமுக்கால்வேலி நிலம் அளிக்கப் பெற்றிருந்தது. மண்டபங்கள் : இக் கோயிலில் திருச்சிற்றம்பலவேலைக்காரன் திருமண்டபம் ஒன்று இருந்தது. திருக்கடவூர் சபையார் இம்மண்டபத்தில் கூட்டங் கூடுவது வழக்கம். இதுவன்றிக் குலோத்துங்கசோழன் திருவெடுத்துக் கட்டி என்னும் மண்டபமும் இருந்தது. இதிலும் சபையார் கூட்டங் கூடுவது உண்டு. எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகள் : அரையர் இராஜராஜ தேவராகிய வாணதரையர் இக்கோயிலில் இராசராச ஈசுவரரை எழுந்தருளுவித்திருந்த செய்தியை மூன்றாங் குலோத்துங்கசோழனுடைய கல்வெட்டு உணர்த்துகின்றது. சடாவர்மன் திரிபுவனச்சக்கிரவர்த்தியாகிய வீரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு இக்கோயிலின் விக்கிரம சோழீச்சரமுடையாரைக் குறிப்பிடுகின்றது. அறச்சாலை : இக்கோயிலில் இராஜாதிராஜன் அறச்சாலை ஒன்று இருந்தது. அதில் பதினேழுபேர்கள் உண்பதற்கு கோமக்குடி விஜயராஜேந்திர மூவேந்த வேளானாகிய பிச்சன் ஆதித்தன் சாலாபோகமாக நிலம் அளித்திருந்தான்.
|