பக்கம் எண் :

221
 

அளிக்கப்பெற்ற நில நிவந்தம் :

திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் தான் பிறந்த ஆனி மூலத்தில் காலகால தேவர்க்கு குலசேகரன் சந்தி என்னும் பெயரால் விசேட வழிபாட்டிற்கும் திருக்கோயிலுக்கு நாடோறும் வழிபாட்டிற்குமாக இராஜேந்திரசோழ மங்கலமான ஆக்கூரினின்று வேறு பிரிந்த குலோத்துங்கசோழன் கருப்பூரில் முப்பத்தொருவேலி நிலத்தை அளித்திருந்தான். விசயநகரவேந்தனாகிய கிருட்டிணதேவ மகாராயர் எட்டுவேலி நிலத்தை அளித்திருந்தார். வீரவிருப்பண்ண உடையார் நூறுவேலி நிலத்திற்குரிய வரிகள் அனைத்தையும் இக் கோயிலுக்குக் கொடுத்திருந்தனர். இவ்வூருக்கு அருகிலுள்ள எருக்காட்டுச்சேரியே இக்கோயிலுக்குச் சொந்தம் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நுந்தாவிளக்குக்களைப்போல் வேறு எங்கும் அளிக்கப்பெறவில்லை. இந்த நுந்தாவிளக்குப்புறங்கள் பெரும்பான்மையும் இவ்வெருக்கட்டாஞ்சேரி மணற்குன்றுகளைத் திருத்தி நிலமாக அளிக்கப் பெற்றனவாகும். "விரும்பி நல்விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே" என்னும் அப்பர்பெருமான் திருவாக்கை எண்ணியே மிக ஏராளமான நுந்தா விளக்குக்களுக்கு நில நிவந்தங்கள் அளித்திருத்தல் வேண்டும்.

பிற செய்திகள் :

இராசநாராயணவளநாட்டுக் கரம்பூர்நாட்டுத் தில்லையாளி நல்லூரில் தில்லையாளி ஈசுவரமுடையார் கோயிலில் எழுந்தருளுவித்திருந்த திருக்கடவூர் நாயகருக்கு அர்ச்சனாபோகமாக மூன்று வேலி நிலத்தைத் திருக்கடவூர் சபையார் விக்கிரமசோழதேவரின் நான்காம் ஆண்டில் விட்டிருந்தனர். தில்லையாளிநல்லூரே இக்காலம் தில்லையாடி என்று வழங்கப் பெறுகின்றது. அக்கோயில் கல்வெட்டு அதைத் தில்லையாளிநல்லூர் என்றே குறிப்பிடுகிறது. இங்ஙனம் மூன்று வேலி நிலம் அளித்திருந்த செய்தியைத் திருவாவடுதுறைக் கோயிலின் மூன்றாம் பிராகாரத்து வடபுறச் சுவரிலுள்ள கல்வெட்டும் உணர்த்துகிறது. இச்செய்தியைப் பற்றி உணர்த்தும் கல்வெட்டு திருவாவடுதுறைக் கோயிலில் இருப்பதன் காரணம் புலப்படவில்லை. விசய நகரவேந்தராகிய கிருட்டினராயர் காலத்துக் கல்வெட்டுப் பாடல் திருக்கடவூரில் வசித்து வந்தவனும், ரெய்ச்சூர் சண்டையில் ஈடுபட்டு வந்தவனும் ஆகிய ஆபத்சகாயன் என்னும் பிராமணன் இக் கோயிலைப் பழுதுபார்த்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.