பக்கம் எண் :

222
 

பாண்டிய நாட்டார் ஒருவர் பள்ளியறைக்குச் சிம்மாசனம் கொடுத்துள்ளனர். மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில் வீராந்தப்பல்லவரையர் என்னும் புலவர் பெருமகனார் இருந்தனர். அவரிடத்தில் சோழ மன்னன் நல்லமதிப்பு வைத்திருந்தான். இப்புலவரின் விருப்பப்படி இக்கோயில் நட்டுவநிலை பாரசிவன் பொன்னனாகிய கால விநோத நிருத்தப் பெரியானுக்கு அரசனால் கொடுக்கப் பெற்றது.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு :

இவ்வூர் முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர்நாட்டுக் கடவூர் என்றும்; முதற் குலோத்துங்கசோழன் காலத்தில் இராஜநாராயணவளநாட்டு அம்பர் நாட்டுக் கடவூர் என்றும்; மூன்றாங் குலோத்துங்கசோழன் காலத்தில் சயங்கொண்ட சோழவளநாட்டு அம்பர் நாட்டுக் கடவூர் என்றும் இக்கோயில் 1கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளன.

21. திருக்கடவூர்மயானம்

சிவபெருமான் ஒரு கல்பத்தில் பிரமதேவரை எரித்து, நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலமாதலின் மயானம் என்னும் பெயர் எய்திற்று என்பர். இதை இக்காலம் மெய்ஞ்ஞானம் என்று மக்கள் வழங்குகின்றனர். இது திருக்கடவூர்க்குக் கிழக்கே 2 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் நாற்பத்தெட்டாவது ஆகும்.

எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர் ஆதலின் இப்பெயர் பெற்றது என்பர். (இவ்வூரில் திருக்கடவூர் - வீரட்டானம், திருக்கடவூர் - மயானம் என்னும் இரு (தேவாரம் பெற்ற) தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் திருக்கடவூர் - மயானம் என்பது பற்றியது ஈண்டுத் தரப்பட்டுள்ளது)

இறைவர்: பெரியபெருமான் அடிகள்; பிரமபுரீசர்.

இறைவி: மலர்க்குழல் மின்னம்மை.


1. See the Annual Reports on South Indian Epigraphy of the year 1906 Numbers 15-52. 1925 Numbers 241-258.