காசித்தீர்த்தம், இதிலிருந்துதான் திருக்கடவூர் வீரட்டானேசுவரருக்கு நாடோறும் திருமஞ்சனம் கொண்டு வரப்படுகிறது. பங்குனி மாதம் சுக்கிலபட்சம் அசுவதி நட்சத்திரத்திலே இத்தீர்த்தத்தில் மக்கள் மிகுதியாக வந்து நீராடுகின்றனர். பிர்மதேவர் பூசித்தது. இது மூவர்களாலும் பாடப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு : இவ்வூரில் பதினாறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. பதினைந்து, சோழர்களுடையனவும், ஒன்று, பாண்டியனுடையதுமாம். சோழர்கள் பிற்காலச் சோழர்களே. (கி. பி. 12. 13 நூற்றாண்டினர்). வீணை வாசிக்க, வேதம் ஒத, ஸ்ரீ ருத்திரம் சொல்லத் திட்டம் செய்யப்பட்டது. சுங்கம் தவிர்த்த குலோத்துங்கன் பதினாறாம் நூற்றாண்டில் நிலம் அளக்கப்பட்டது. தீர்வை விதிக்கப்பட்டது. நந்தவனம் வைப்பதற்குத் தோட்டத்திற்கு ஆள் நியமனம் செய்யப்பட்டது. ஊர்: ஜெயங்கொண்ட சோழவளநாடு, ஆக்கூர்நாடு, திருக்கடவூர் என்று குறிக்கப்பட்டது. இந்நாட்டில் திருத்தொண்டத் தொகை மங்கலம், சிவபாதசேகர மங்கலம், திருநீற்றுச்சோழமங்கலம் என்ற ஊர்கள் கூறப்பட்டுள்ளன. சுவாமிபெயர் திருமயானமுடைய பெருமான் என்று கூறப்பட்டுள்ளது. 22. திருக்கருப்பறியலூர் இது வைத்தீசுவரன் கோயில் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 7.5 கி.மீ. தூரத்திலிருக்கிறது. தலைஞாயிறு என வழங்கப்பெறுகிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பந்தணைநல்லூர், வைதீஸ்வரன் கோயிலிருந்தும் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. ஊரின்பெயர் கருப்பறியலூராக இருப்பினும், கோயிலுக்குக் கொகுடிக்கோயில் என்று பெயர். முல்லைக் கொடியைத் தலக் கொடியாக உடைமையால் இப்பெயர்பெற்றது என்பர் ஒருசிலர். கோயில் அமைப்புப் பற்றி இப்பெயர்பெற்றது என்பர் வேறுசிலர். இறைவரது திருப்பெயர் குற்றம் பொறுத்தநாதர். ஒரு காலத்தில்
|