பக்கம் எண் :

22
 

கட்டநோய் பிணிதீர்த்தாய் கலந்தருளிப் போதுவித்தாய், நின்பணி பிழைக்கில் புளியம் வளாரால், மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சியேகம்பனே" (தி. 4 ப. 99 பா. 1) எனும் பாடல் கருத்தைத் தழுவியதாய்ச் சுந்தரர் பாடல் ஒன்று இப்பதிகத்தில் காண்கிறோம். "ஒழிப்பாய் என் வினையை உகப்பாய் முனிந்தருளி, தெழிப்பாய் மோதுவிப்பாய்" என்பது அப்பாடல் பகுதி. (தி. 7 ப. 23 பா. 5)

பொன்னார் மேனியன் :

பெருமானைப் பொன்னுடன் ஒப்பிட்டுப் பல இடங்கள் பேசப்படுகின்றன. "பொன் செய்த மேனியினீர்" என்று சுந்தரரும், "பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" என்று அப்பரும் போற்றி உள்ளனர். காரணம் பொன் பயன் கருதாதது. அது யாரிடம் உள்ளதோ அவர்களே பொன்னின் பயனை அடைகின்றனர். பெருமை பெறுகின்றனர். அதைப்போல் பெருமான் யாரிடம் உள்ளாரோ அவர்கட்குத்தான் பெருமை, பலன் எல்லாம். அவர்களால் பெருமானுக்கு யாதொரு பலனுமில்லை. இதனால்தான் பொன்னைப் பெருமானுக்கு உவமையாகக் காட்டியுள்ளனர். இக்கருத்தைப் பட்டினத்துப் பிள்ளையார்,

பொன்னால் பிரயோசனம்

பொன் படைத்தாற்குண்டு பொன்படைத்தோன்

தன்னால் பிரயோசனம் பொன்னுக் கங்கு

ஏதுண்டுஅத் தன்மையைப் போல்

உன்னால் பிரயோசனம் வேணதெல்லாம்

உண்டு உனைப்பணியும்

என்னால் பிரயோசனம் ஏதுண்டு

காளத்தி ஈச்சுரனே.

பட்டினத் - திருக்காளத்தி பா-2

என்று பாடியுள்ளார். இதனால் "பொன்னார் மேனியன்" என்று பாடியதன் உண்மை புலனாகிறதன்றோ.

உன் குற்றேவல் செய்வேன் :

"மறியாகிய மானைக் கையில் ஏந்தியவனே, மதவலிமிக்க யானையதுதோலை உரித்துப் போர்த்தவனே, யாவராலும் குறிக்கோளாகக் கொள்ளப்படும் பெரும்பொருளே, என்னை மாணாக்கனாக உடைய ஆசிரியனே, குருவே, உன்குற்றேவல் செய்வேன். திருக்காளத்தியுள் அறிவே உருவாக உள்ள பெருமானே, உன்னையல்லாது வேறு ஒரு பொருளையும் அறிந்து ஏத்தமாட்டேன்" என்கிறார். அப்பாடல் காண்க.