பக்கம் எண் :

23
 

மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே,
குறியே என்னுடைய குருவேஉன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே!

(தி. 7 ப. 26 பா. 4)

அஞ்சல் என்னே :

தம்பிரான் தோழர் வெஞ்சமாக்கூடல் வழிபட்டு் நெடுந்தூரம் கடந்து திருக்கற்குடியில் விழுமியானைப் பணிந்தார். அஞ்சேல் என்று அருள்செய்ய வேண்டுகிறார். உலகியல் அவரை அஞ்சச் செய்தமையால் இங்ஙனம் வேண்டுகிறார். "விடையாரும் கொடியாய்" எனத்தொடங்கும் பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "அடியேனையும் அஞ்சல் என்னே" என்ற தொடரை மகுடமாகவே பாடி நிறைவு செய்கிறார். இதற்கேற்பச் சுவாமியைக் கற்பகமாகவே பாடுகிறார். இங்குள்ள பெருமானும் "கற்பகநாதர்" என்றும் "உய்யக்கொண்டநாதர்" என்றும் போற்றப் பெறுகிறார். அஞ்சேல் என்று அபயம் அளித்து ஆட்கொள்ளும் திறம் புலனாகிறது. பஞ்சபூதமாகவும் அயன், மால் போற்றும் கனலாயும், கற்பகமாகவும் கற்குடியில் எழுந்தருளியுள்ள பாங்கை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். அப்பாடல் காண்க.

நிலனே நீர்வளிதீநெடு வானகமாகி நின்ற
புலனே புண்டரிகத்து அயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சல்என்னே.

(தி. 7 ப. 27 பா. 8)

ஆரா என் அமுதே :

திருநள்ளாற்றினின்றும் திருக்கடவூருக்கு எழுந்தருளிய சுந்தரர் அமுதகடேசப் பெருமானை "பொடியார் மேனியனே" என்று தொடங்கும் பதிகத்தில் பலமுறை "என் அமுதே" என்றழைத்து "நீயலாது எனக்குத் துணை யாருளர்?" என்று வினவி மகிழ்கின்றார். ஆலின்கீழ் நால்வர்க்கு அருள்புரிந்த பெருமான், காலன் உயிரைக் கொன்று மறையோனாகிய மார்க்கண்டர்க்கு உயிர் கொடுத்தான் என்றும் புலப்படுத்துகிறார். அப்பாடல்,

அன்றாலின் நிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலன்உயிர், கொடுத்தாய் மறையோனுக்கு,மான்
கன்றா ருங்கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்தாதை பெருமான் எனக்கார் துணைநீயலதே.

(தி. 7 ப 28 பா. 3)