பக்கம் எண் :

24
 

பாடுவார் பசி தீர்ப்பாய் :

திருக்கோலக்கா பணிந்து, 'சீகாழியை வலங்கொண்டு திருக்குருகாவூர் வெள்ளடை சென்றபோது குருகாவூர்ப் பெருமான் தண்ணீர்ப்பந்தரும் பொதி சோறும் கொடுத்துப் பசி தீரச்செய்தார். சிறிது ஓய்வு எடுத்தபின் தண்ணீர்ப்பந்தருடன் பெருமான் மறைந்தார். இவ்வற்புதம் உணர்ந்த ஊரர் "இத்தனை ஆமாற்றை அறிந்திலன்" என்று பதிகம் பாடினார். இத்தனை எளிவந்த கருணையாளனாக இருக்கும் பெருமானை அறிந்திலேனே என்று இரங்குகிறார். மூன்றாம் பாடலில் தனது பசிபோக்கினமையைப் போற்றிப் பாடியுள்ளார். பரவுவாரது பிணியை நீக்கும் பெற்றிமையையும் அப்பாடலிலேயே குறித்துள்ளார். அப்பாடல் காண்க.

பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன்கலனாக உண்பலிக்கு உழல்வானே
காடுநல் இடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.

(தி. 7 ப. 29 பா. 3)

இப்பதிகத்தில் திருக்கயிலையினின்றும் பூமியில் வந்து பிறந்தமை பழியின்பாற்படும். அப்பழி வாராமே தவிர்த்துப் பெருமான் ஆட்கொண்டமையால் அப்பழி நீங்கிற்று. இதனை "வரும்பழி வாராமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்" என்று குறித்துள்ளார். மேலும் "பண்ணிடைத் தமிழ் ஒப்பவனும் பழத்தினில் சுவை ஒப்பவனும், கண்ணிடை மணி ஒப்பவனும், நீயேயன்றோ" என்று பெருமானின் பெருமையைப் பெருமிதத்துடன் குறிக்கின்றார்.

அடிகேள் உமக்கு ஆர் துணை:

சுந்தரர், சேரமான் பெருமாளுடன் திருமறைக்காடு, அகத்தியான் பள்ளி தரிசித்துக் கோடிக்கரையில் உள்ள கோடிக்குழகர் கோயில் சேர்ந்தார். இக்கோயில் கடற்கரை ஓரமாகத் தனியே உள்ளது. அன்பில் இன்பம் ஆர்வாராகிய சுந்தரர், பெருமான் தனியே துணையின்றி இருக்கின்றாரேயென்று கவல்கின்றார். சுந்தரரின் அன்பு பெருமானின் பராக்கிரமத்தை எல்லாம் மறக்கச் செய்துவிட்டது. இத்தனித்த இடத்தில் துணையில்லாது இருக்கின்றீரே என்று பாடிப் பரவுகின்றார். அப்பாடல் வருமாறு:

கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக்கரைமேல்
குடிதானய லேயிருந்தாற் குற்ற மாமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.

(தி. 7 ப. 32 பா. 1)