இம்மையே தரும் சோறும் கூறையும் : பங்குனி உத்திரப் பெருவிழாச் செலவிற்குப் பொருள்பெற விரும்பியவராய்த் திருப்புகலூர் சேர்ந்தார். புகலூர் இறைவனைத் தொழுதார். கோயிலின் முன்புறம் மண்டபத்தில் உள்ள செங்கற்களையே தலைக்கு உயரமாக வைத்துத் துயில்கொண்டார். விழித்தெழுந்தபொழுது அச்செங்கற்கள் பொன்கற்களாக மாறியிருந்தன. அப்பொழுது பாடியதே "தம்மையே புகழ்ந்து" எனத்தொடங்கும் திருப்பதிகம். இதில் மனிதனைப் போற்றுவதால் யாதும் பயனில்லை. இறைவனைப் போற்றுங்கள். இம்மையில் உங்களுக்கு வேண்டிய வளங்களும் அம்மையில் சிவகதியும் கிடைப்பது உறுதி என அறிவுறுத்திப் பாடுகிறார். உணவு, மிகினும் குறையினும் நோய் செய்யும். அதைப்போலவே செல்வமும் மிகினும் குறையினும் இடர்செய்யும். எனவே அளவோடு பெறுதலே நமக்கு நலம் செய்யவல்லது. அடியார்களை இப்படித்தான் உயர்த்தாமலும் தளர்த்தாமலும் ஆதரித்து அருள்செய்கிறான் இறைவன். சுந்தரரின் வரலாறு உணர்த்தும் உண்மையிது. அப்பாடல் காண்க. | தம்மையே புகழ்ந்து இச்சைபேசினும் | சார்வினும் தொண்டர் தருகிலாப் | | பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை | புகலூர் பாடுமின் புலவீர்காள் | | இம்மையே தரும் சோறும் கூறையும் | ஏத்தலாம் இடர்கெடலுமாம் | | அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு | யாதும் ஐயுறவில்லையே | (தி. 7 ப. 34 பா. 1) |
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை : திருஆறைமேற்றளி முதலிய தலங்களை வணங்கித் திருஇன்னம்பர் சேர்ந்தார் சுந்தரர். இன்னம்பர் ஈசரோ இவரை என்ன என்றுகூட உசாவினார் இல்லை. சுந்தரரோ தோழர் என்பதற்கேற்ப "அங்கம் ஓதியோர்." என்று தொடங்கும் பதிகம் பாடினார். இன்னம்பர் ஈசர் ஏதும் கேட்கவில்லை ஆதலின் "நாம் புறம்பயம் தொழப்போதுவோம்" என்று பாடினார். மேலும் பல உண்மைகளை இப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுமை என்பது பொருள். ஆளும் திறனறிந்து ஆளுதலே ஆண்மை எனப்படும். திறனறிதலாவது இளமையிலேயே அறம் செய்தல் ஆகும். பின்பு செய்வோம் எனல் ஆண்மை ஆகாது என்று கூறுகிறார் ஆரூரர். இவ்வாறு இளமையிலேயே அறம் செய்தல் அரிது என்பதையும் உணர்த்துகிறார்.
|