பக்கம் எண் :

26
 

"புறம் திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீயுரை யாற்றளர்ந்(து)
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண்"

(தி. 7 ப. 35 பா. 3)

என்கிறார் சுந்தரர்.

செய்த தீமைகள் இம்மையே வரும் :

நாம் செய்யும் நன்மை தீமைகள் மறுமையில் வரும் என்பதே பெரும்பாலோர் கூறும் உண்மை. ஆனால் இம்மைச் செய்த தீமை இம்மையே நம்மை வந்தடையும் என்ற உண்மையைச் சுந்தரர் இப்பதிகம் நான்காம் பாடலில் குறித்துள்ளார். ஒருவன் ஒருவனைக் கத்தியால் குற்றிக் கொலை செய்து அவனிடம் உள்ள பொருள்களைக் கவர்ந்து கொள்வான் ஆயின் அத்தீமைகள் இம்மையே வரும் என்பதைத் திண்ணமாகக் கூறுகிறார் ஆரூரர். திண்ணம்-உறுதி. இதில் குற்றுக்கும் குத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறார். குற்றுதல்-கருவியால் குற்று தலையே குறிக்கும். குத்துதல்-கையினால் குத்துதலையே குறிக்கும். இவ்வேறுபாடு உணர்வார்களாக. அப்பாடல் காண்போம்.

"குற்றொருவரைக் கூறை கொண்டு

கொலைகள் சூழ்ந்த களவெல்லாம்

செற்றொருவரைச் செய்த தீமைகள்

இம்மையே வரும் திண்ணமே"

(தி. 7 ப. 35 பா. 4)

திண்ணமாய் வரும் என்று உறுதிபடக் கூறியுள்ளமை உணர்க.

தேரை வால் :

தேரை தவளையில் ஒருவகை, "கல்லினுள் தேரைக்கும்" என்பது காண்க. தேரை குஞ்சாக இருக்கும்பொழுது அதன் பின்பக்கம் சிறிய வால் இருக்கும். அதைக் கொண்டு அது மீன் குஞ்சு என்று எண்ணுவாரும் உண்டு. தேரை வளர வளரத் தேரையின் வால் மறைந்து விடும். இதை நிலையாமைக்கு உதாரணமாக எடுத்தாளுகின்றார் சுந்தரர். படைகளைக்கொண்டு வெற்றி பெற்ற வாழ்வும், அதனால் கடல் சூழ்ந்த உலகத்தை ஆளும் செல்வமும் ஆகிய இவையெல்லாம் "தேரை வாலைப்போல" நிலையில்லாதனவாகவே முடியும். அதனால் "புறம் பயம் தொழப் புறப்படு நெஞ்சமே" என்று நெஞ்சுக்கு நீதி கூறுகிறார்.

"படையெலாம் பக(டு) ஆர ஆளினும்
பவ்வஞ்சூழ்ந்தர சாளினும்