பெயர் குறிப்பிடாமல் உள்ள சில கல்வெட்டுக்களும் இருக்கின்றன. தலைஞாயிறு என்னும் பெயர் எய்தியதற்குக் காரணம் :- மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்தில் இவ்வூர் தனிநாயகச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் பெற்றது. அப்பெயரே சிதைந்து இக்காலம் தலைஞாயிறு என வழங்கப்பெறுகின்றது. இது மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இராசாதிராச வளநாட்டுக் கழுமல நாட்டுக்கு உட்பட்டிருந்தது. இவ்வூரை, இக்கோயில் கல்வெட்டுக்கள் அகரம் தனிநாயகச் சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடுவதால் இது பிராமணர்கள் நிறைந்து வாழ்ந்த இடமாக இருக்க வேண்டும். இக் கோயிலில் பாறையின் மீது எழுந்தருளியிருக்கும் இறைவர் பார்வதி பாகர் என்னும் பெயரால் குறிக்கப் பெறுகின்றார். சோழக்குலத்தான் மங்களாதிராசர் என்பவர் இக்கோயிலின் ஸ்தூபியை வைத்தவர் ஆவர். அது நிகழ்ந்தது மூன்றாங் குலோத்துங்கசோழன் காலமாகும். இத்திருக்கோயிலில் பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்தவர் வில்லவரையர் ஆவர். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் மூன்றாம் ஆண்டில் திருஞானம்பெற்ற பிள்ளையாருக்குக் காலை சந்திக்கும், உச்சியம் போதைக்கும் திருவமுது நடத்துமாறு நிவந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இக்கோயிலை வழிபடவரும் மாகேஸ்வரர்களுக்கும், திருவாதிரையில் கூத்தப்பெருமானை எழுந்தருளச் செய்வதற்கும் நிவந்தங்கள் அளிக்கப் பெற்றுள்ளன. இக்கோயிலில் பெருமாள், சுந்தரப்பிள்ளையார், திருவுடையார், சோழர்குலத்தன் மங்களராசர் இவர்களின் உருவங்களின் பெயர்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. ஆனால் இப்பெயர்களுக்குரிய உருவங்கள் காணப்பெறவில்லை. ஊர்ச்சபை உறுப்பினர்களாதற்குரிய சட்டதிட்டங்கள் இக்கோயில் வடபுறச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ளன. அரசியல் அக்காலத்தில் எவ்வாறு நடைபெற்றது என்பதை அறிய விரும்புவாருக்கு இக்கல்வெட்டுப் பெரிதும் பயன்தரும். இக்கோயிலிலுள்ள மகாமண்டபம் விக்கிரம சோழவேளாளரால் கட்டப்பெற்றது1.
1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927, No. 140-158.
|