23. திருக்கலயநல்லூர் இவ்வூர் இக்காலம் சாக்கோட்டை என்று வழங்கப் படுகின்றது. கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் போகும் பெருவழியில், கும்பகோணத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென்கரையில் இருக்கின்றது. உயிர்களை அடைத்த கும்பத்தின் கலயம் பிரளய வெள்ளத்தில் தங்கிய இடமாதலின் கலயநல்லூர் என்னும் பெயர் எய்திற்று என்பர். இங்குள்ள கோயில்கள் நான்கு பக்கங்களிலும் தாமரைப் பொய்கைகளால் சூழப்பட்டுள்ளது என்பதனை, "தண்கமலப் பொய்கை புடைசூழ்ந்தழகார் தலத்தில்" என்னும் இத்தலத்துத் தேவார அடியால் விளங்குகின்றது. இக்காலம் கிழக்குப் பக்கத்துப் பொய்கை மக்களால் தூர்க்கப்பட்டுள்ளது. சுந்தர மூர்த்தி நாயனார் காலத்தில் அதாவது கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்கோயில் பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது. இச்செய்தி, "தடங்கொள் பெருங்கோயில்தனில்" என்னும் அவரது வாக்கால் புலனாகும். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இச்செய்தி, 'வண்கமலத்தயன் முன்னாள் வழிபாடு செய்ய மகிழ்ந்தருளி யிருந்த பிரான்' என்னும் இத்தலத்துத் தேவாரப் பாடலின் அடியால் அறியக் கிடக்கின்றது. இறைவர் :- அமிர்தகலாநாதர். இறைவி :- அமிர்தவல்லி. 1இவ்வூர்க்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்று. இப்பதிகத்தில் பழைய வரலாறுகளை அமைத்து இவர் பாடியுள்ளதைச் சேக்கிழார் பெருமான், 'மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித்திசையின் விளம்பினார்' எனப் பாராட்டியுள்ளார். இப்பதிகத்தில் இயற்கை
1. குறிப்பு:- இத்தலத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைல் தொலைவில் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பட்ட திருக்கருக்குடி இருக்கின்றது. அவ்வூர் இக்காலம் மருதாந்த நல்லூர் என்று வழங்கப் படுகின்றது.
|