வடக்கு நோக்கிச் செல்லும் சிறப்புடையது. (2) பிரம தீர்த்தம் (3) சரசுவதி தீர்த்தம். (4) சூரிய தீர்த்தம் முதலியன. திருமால், பிரமதேவர், திருமகள், கலைமகள், திக்குப் பாலகர் முதலான தேவர்களும், அகத்தியர், வசிட்டர் முதலான முனிவர்களும், முசுகுந்தச் சக்கரவர்த்தி, நக்கீரர் முதலான பெரியோர்களும், வழிபட்டுப் பேறுபெற்ற தலம். அன்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் கண்ணப்ப நாயனார் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெருஞ்சிறப்பு வாய்ந்த பதி. கண்ணப்பரது திருத்தொண்டைப்பற்றி "வாய்கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசனடி கூடு காளத்திமலையே" எனத் திருஞானசம்பந்தப் பெருமானும், "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ". என வாதவூரடிகளும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இத்தலத்திற்கு வீரை நகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணம் ஒன்றும், கருணைப் பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்ப தேசிகர் இவர்கள் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம் ஒன்றும். சேறைக்கவிராசர் பாடிய உலா ஒன்றும், நக்கீரதேவர் பாடிய கைலைபாதி காளத்திபாதி அந்தாதி ஒன்றும் ஆக நான்கு நூல்கள் இருக்கின்றன. இவைகளன்றி ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன. இவ்வூர்ப் பாடல்பெற்ற கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழதேவன், முதலாம் இராஜாதிராஜ தேவன், இராசகேசரி வர்மனாகிய வீரராஜேந்திரன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தர்களில், வீரப்பிரதாப ஹரிஹரராயர், வீரப்பிரதாப தேவராயர், வீரப்பிரதாப வீரகிருஷ்ணன் தேவராயர், வீரசதாசிவ மகாராயர் முதலானோர் காலங்களிலும், காகதீய வம்சத்துக் கணபதி காலங்களிலும், மற்றும், விஜயகண்ட கோபால தேவன், ஆளும் திருக்காளத்தித் தேவனாகிய கண்ட கோபாலன் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
|