பக்கம் எண் :

28
 

பதிகத்தால் தெளிவித்துள்ளார். ஆலக்கோயில் என்பது கீழே உள்ள கோயில். "மலைமேல் மருந்தே" என்பது மலைக்கோயிலைக் குறிக்கும்.

"ஆலக்கோயில் கல்லால் நிழற்கீழ் அறங்கள் உரைத்த அம்மானே" என்பதும் "காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலைகளைவாய் கறைக்கண்டா" என்பதும் "பொய்யே உன்னைப்புகழ்வார், புகழ்ந்தால் அதுவும் பொருளாகக் கொள்வானே" என்பதும், "எங்கள் பெருமானே மெய்யாகவே உன்னை நினைவாரை நினைகண்டாய்" என்பதும் இவ்வூர் "முதுவாய்ஓரி கதற" என்னும் பதிகத்துள் காணப்பெறும் இறைத் தத்துவங்கள். நிறைவுப் பாடலால் வன்தொண்டர் "பன்னுதமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே" என அடியவர்கள் அடி என்றும் தம் முடிமேல் இருக்கத்தக்கன என்று பெருமைபடக் கூறுகின்றார். சம்பந்தரும் அப்பரும் திருக்கோயில் வலம் வருவார், பெருமானைப் பரவுவார் திருவடிகள் என்முடிமேலன என்று அருளியுள்ளனர். இவரோ இப்பாடலைப் பாட வல்லார் என் தலைமேல் பயில்வார் என்று சொல்லியுள்ளார். இவர்தம் அடியார் பக்தி கண்டு பெருமை கொள்வோம்; பின்பற்றிப் பெருமை அடைவோம்.

விகிர்தன் :

விகிர்தன் - வேறுபாடுடையவன். தலையில் சடை, கங்கை, பிறை, பாம்பு, கொன்றை முதலியவற்றை அணிந்தவன். இவற்றை நாம் அணிவதில்லை. எனவே நம்மினும் வேறுபட்ட அலங்காரத்தையும், செயற்பாட்டையும் உடையவனை விகிர்தன் எனப்போற்றி உள்ளனர். நம்பி ஆரூரரோ பேரூர்ப் பெருமானைத் தொழுதபொழுது தில்லைப் பெருமானின் காட்சியைப் பேரூரில் கண்டு, தரிசித்து, வெஞ்சமாக்கூடல் சேர்ந்தார். இங்குச் சிற்றாறு என்னும் ஆறு வடக்கு நோக்கி ஓடுகிறது. அச்சிற்றாற்றின் கீழ்க்கரையில் உள்ளது வெஞ்சமாக்கூடல் கோயில். இப்படி இருப்பதைத் 'திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல் வெஞ்சமாக்கூடல் விகிர்தா" என அழைத்துப் போற்றுகிறார். அத்தலத்து அம்மை பெயர் "பண்ணேர்மொழியாள்" என்பதாகும். இதனைப் "பண்ணேர் மொழியாளையோர் பங்குடையாய்" (தி. 7 ப. 42 பா. 4) என்று பாடி மகிழ்கின்றார். "தொழுவார்க்கு எளியாய்" அவர்களின் துயர் தீர நின்றாய் என்று பெருமான் அடியவர்கட்கு அருளும் பாங்கினை எடுத்து ஓதுகின்றார். "உழுவார்க்கு அரியவிடைஏறி" என்பதனால் உழவிற்கு ஒரு விடை பயன் தாராது என்பதும் அத்துடன் தேவர்கள்