பக்கம் எண் :

30
 

உன்னை நான் மறந்தாலும், என் நா உன் நாமத்து எழுத்தைந்தையும் மறவாது சொல்லும்" என்று அருளுகின்றார். (தி. 7 ப. 48) இட்டன் - பெருமானால் விரும்பப் பெற்றவன். சுந்தரர் தன்னைச் சொல்லிக்கொள்கிறார் இட்டன் என்று. "இட்ட! நுன்னடி ஏத்துவாரை இகழ்ந்திட்டநாளும், உனை மறந்திட்ட நாளும் என் வாழ்வில் கெட்ட நாள்களாகும். ஓவுநாள் உனை நினையாதொழிந்த நாள்கள் உணர்வழிந்த நாள்கள், உயிர்போன நாள்கள், உயர் பாடைமேல் செல்லுநாள் என்றே கருதுகிறேன். ஆதலின் நாவலனே உன்னை நான் மறக்கினும் என் நாவானது நமச்சிவாயத்தைச் சொல்லத் தவறாது" என்று உறுதிபட மொழிகின்றார். இப்பதிகம் (தி. 7 ப. 48) அஞ்செழுத்துத் திருப்பதிகமாய் உள்ளது. அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அருள்பெற்றுத் திகழ்வோம்.

எத்துக்கு இங்கிருந்தீர் :

சுந்தரர் பெருமான் அருளாகிய பேரின்பத்தையே நாடியவரன்றி உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்டவர் அல்லர் என்பதை எடுத்துக்காட்டுவது திருமுருகன் பூண்டி வரலாறு.

திருவொற்றியூரில் சங்கிலியாருடன் வாழ்ந்த இன்ப வாழ்வைவிட்டு, திருவாரூர்ப் பங்குனி உத்திரத் திருநாளை எண்ணி வந்தமையும், கொடுங்கோளூரில் சேரமான் பெருமானுடன் அரச போகத்தில் இருந்தவர் அதனைத் துறந்து ஆருர் சேரத் துணிந்தமையும், அவர்தம் குறிக்கோளைக் தெள்ளிதின் புலப்படுத்தும்.

கொடுங்கோளூரில் சேரமானுடன் தங்கியிருந்த பொழுது ஒருநாள், "பொன்னும் மெய்ப்பொருளும் போகமும் திருவும் புணர்த்தியவனை, பிழையைப்பொறுப்பவனை, பிழையெலாம் தவிரப் பணிப்பவனை மறத்தலும் கூடுமோ?" என்று பாடியவராய் திருவாருர் புறப்பட்டார். அதை உணர்ந்த சேரர் பெருமான் அமைச்சர்கள் வாயிலாக நவமணிகளும், மணிப்பூண்களும் துகில் வருக்கம் முதலியவைகளும் ஏவலாளர்கள் தலையின் மேல் நிரம்ப ஏற்றி அனுப்பினார். வழியில் திருமுருகன் பூண்டிக்கருகில் சிவபெருமான் பூதங்களை வேடர் வடிவோடு சென்று பொருள்களைக் கவர்ந்து வருமாறு செய்தார். பூதகணங்கள் அவ்வாறே செய்தன. அஃது உணர்ந்த சுந்தரர் திருமுருகன் பூண்டிப் பெருமான் கோயிலை அடைந்து "கொடுகு வெஞ்சிலை" எனத் தொடங்கும் பதிகம் பாடி அருளினார். பொருள்களை மீண்டும் பெருமான் அருளால் பெற்றார்.