பக்கம் எண் :

354
 

திருமெழுக்கிடல் இவைகளைச் செய்வார்க்கு நிசதி நெல் குறுணி இருநாழியும் திருமெய்க்காப்பர் இருவர்க்கு நிசதி நெல் முக்குறுணியும், கரணத்தான் ஒருவனுக்கு நிசதி நெல் பதக்கும், இராசநீதி ஓடிசெய்வார்க்கு நிசதி நெல் பதக்கும், ஸ்ரீ காரியஞ் செய்வானுக்கு நிசதம்பதக்காக ஓராட்டைக்கு நெல்லு அறுபதின்கலமும், திருப்பதியம் பாடுவார் இருவர்க்கு நிலம் எழுமாவரையும் ஆகச் சம்பளங்கள் கொடுக்கப்பெற்று வந்தன. இவைகளை எல்லாம் அக்காலம் நல்ல சம்பளங்களாகக் கருதுதல் வேண்டும்.

வேள்விக்குடி கோயில் கட்டப்பெற்ற காலம் :

இக்கோயிலில் உள்ள பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள் எல்லாம் "கோப்பரகேசரி பன்மற்கு" என்று தொடங்குகின்றன. இப் பரகேசரி என்னும் சோழன் பராந்தகன் I ஆதல் வேண்டும். எனவே முதலாம் ஆதித்த சோழனது மகனாகிய பராந்தகன் I காலத்தில் இக்கற்றளி எடுப்பிக்கப்பெற்றதாகும்.

கோயிலைக் கட்டியவர் :

இத்திருக்கோயிலில் வாலக்கால்படை மட்டஞ் செய்வித்துத் தாடிப்படையும் பதினான்கு கல்லுஞ் செய்வித்தார் நல்லூர்நாட்டுத் திருநல்லூர் தச்சுவன் காடன் கெட்டியான திருவையாறு யோகியாவர். இத்திருக்கற்றளியில் நாலோபாதி கற்றளியைக் கட்டியவர் திருவேள்விக்குடி நம்பியார் திருவையாறு யோகியாரும் அவரது மகனாகிய ஸ்ரீகர்ண திருக்கற்றளிப் பிச்சரும் ஆவர்.

மகா மண்டபத்தின் கிழக்கில் எடுத்துக்கட்டி கடலங்குடியில் இருந்த திருவரங்க தேவனான கங்கை கொண்ட சோழ விசயபாலனால் கட்டப்பெற்றதாகும். அர்த்த மண்டபத்து வாசல் நிலைக்கல்லைச் செய்வித்தான் திணைக்களத்து கரவு சாந்து எழுதுகின்ற பெரிய கிழவன் பட்டன் தேவன் ஆவன்.

கற்கள் உதவியவர் :

சமிதன் வேளாண் சோழியும், ஆவூர்க் கூற்றத்து சூலபாணி வேள் கிழவனும், மணவில்கோட்டத்து அரும்பாக்கமுடையான் சீயகனாங்கனும், வீரநாராயணப் பல்லவரையர் பெண்டாட்டி குணமல்ல நாணங்கையும், இத்திருக்கோயிலைக் கட்டுவதற்குக் கற்கள் உதவியுள்ளனர்.