அர்த்தமண்டபத்து வாசலில் தென்பால் உள்ள மூன்று கற்கள் கண்டராச்ச தெரிஞ்ச கைக்கோளரில் ஒற்றிகண்ட ராவணன் முதலான மூவர்களால் இடப்பட்டனவாகும். இவர்களேயன்றி கொக்கையூர் கிழவன் அமரநிதி அண்ணியூர் நக்கனும் கல் கொடுத்துள்ளான். இறைவரின் திருப்பெயர் : இக் கல்வெட்டுக்களில் இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவேள்விக்குடி ஆழ்வார், மங்கலநக்கர், ஸ்ரீகோயில் தேவர், திருவேள்விக்குடி உடையார், மணவாள நம்பி என்னும் திருப்பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். இறைவியாரின் திருப்பெயர்கள் : இறைவியார் திருக்காமக்கோட்டமுடைய பெரியநாச்சியார், நாறு சாந்து இளமுலை நாச்சியார் என்னும் திருப்பெயரால் கூறப்படுகின்றனர். நாறு சாந்து இளமுலை அரிவையர் என்று அம்மையாரின் திருப்பெயரை ஞானசம்பந்தர் இவ்வூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பது மகிழ்தற்குரியதாகும். எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகள் : திருவேள்விக்குடி எங்கணதாசன் கூவண்டென் ஆடவல்லான் பட்டான் இக்கோயிலில் திருவுருநம்பியாரை எழுந்தருளுவித்துள்ளான். இச்செய்தி கங்கை கொண்ட சோழனது மகனாகிய கோப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திரதேவரின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. சில திருமேனிகளைச் செய்வித்தவர்கள் : இக்கோயில் கர்ப்ப இல்லின் தென்புறத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைச் செய்வித்தவர் வளஞ்சியர் பணிசெய் மகன் காத்தரேய் சிங்கம் ஆவர். இக்கோயிலில் துர்க்காதேவியார் (கொற்றவை) இல்லை. அவர் இருக்க வேண்டிய இடத்தில் ஓடேந்திச் செல்பவரின் (பிட்சாடனரின்) திருமேனியைப் பிற்காலத்தில் வைத்துள்ளனர். துர்க்கையின் திருமேனியைப் பழங்காலத்தில் எவர்கைக் கொண்டு சென்றனரோ அல்லது பழுதுற்றமையால் எங்கேனும் எடுத்துப் போட்டுவிட்டனரோ
|