(கங்கை கொண்ட சோழ சதுர்ப்பேதிமங்கலம் என்று வழங்கப்பட்டது). பின் இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் இக்கங்கை கொண்ட சோழ சதுர்ப்பேதி மங்கலம் கடலங்குடி ஆயிற்று. அதுவே இன்றளவும் நின்று நிலவுவது ஆயிற்று. இக்கடலங்குடி திருவேள்விக் குடிக்குத் தென்கிழக்கில் சுமார் 2 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இவ்வூர்க் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற (அண்மையில் உள்ள) ஊர்கள் : - குணமலப்பாடி - இது திருவேள்விக்குடிக்கு மேற்கே 2 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இக்காலம் இதை மக்கள் குணதலாப்பாடி என்றும், கொள்ளாப்பரிஎன்றும் சொல்கின்றனர். கோப்பரகேசரி வர்மனின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றிருப்பதால் இவ்வூர் மிகப் பழமை வாய்ந்ததாகும். முருகவேள்மங்கலம் : இது திருவேள்விக்குடிக்கு வடமேற்கே சுமார் 5 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இவ்வூரும் கோப்பர கேசரிவர்மன் காலத்துக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இது இக்காலம் முருவமங்கலம் என்று சொல்லப்படுகின்றது. செம்பியன் கண்டியூர் : இது வேள்விக்குடிக்கு வடமேற்கில் சுமார் 2 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இக்காலம் கண்டியூர் என்று வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்க சோழனின் பத்தாமாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் குறிக்கப்பெற்றள்ளது. எனவே இது, இற்றைக்கு 875 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த ஊராகும். இவ்வூரைப் பற்றித் திருத்துருத்திச் சொன்னவாறு, அறிவார் கோயிலில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளது. சோத்த மங்கலம் : இது திருக்குருக்கைக்கு மேல்பால் உள்ள ஊராகும். முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் நிவந்தம் அளிக்கப்பெற்று அவன் மகனாகிய கங்கைகொண்ட சோழன் காலத்தில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டில் இவ்வூர் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வூர் இற்றைக்கு 946 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாகும்.
|