பக்கம் எண் :

380
 

வந்த இறைவன் பந்தருடன் மறைந்தார். துயிலுணர்ந் தெழுந்த சுந்தரர் மறையவரைக் காணாது அதிசயித்து இவ்வாறருள் புரிந்தவர் குருகாவூர் இறைவனேயெனத் தெளிந்து 'இத்தனையா மாற்றை' எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டே திருக்கோயில் சென்று உணவளித்து உய்வித்த பெருமானைப் போற்றினார்.

குருகாவூர்ப் பெருமானை வழிபட்டபின்னர், சுந்தரர் திருக்கழிப்பாலையை யிறைஞ்சித் தில்லையை அடைந்து திருச்சிற்றம் பலவனைக் கும்பிட்டு மகிழ்ந்தார். பின்பு திருத்தினை நகரைத் தரிசித்துத் தாம் பிறந்த தலமாகிய திருநாவலூரை அடைந்து இறைவனை வணங்கி அடியார்களுடன் அப்பதியில் அமர்ந்திருந்தார்.

இறைவன் இரந்து சோறளித்தது :

தொண்டைநாட்டுத் தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர் திருநாவலூரினின்றும் புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்து வணங்கித் திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தே வந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவர்க்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை. அடியார் பசித்திருக்கப் பொறாத இறைவன் மறையவர் வடிவுடன் வந்து வன்றொண்டரை நோக்கி, 'நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர் யான் சிறிது நேரத்தில் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டுவருமளவும் இங்கேயே இருப்பீராக' என்று கூறிச் சென்று அருகில் உள்ள வீடுகளில் கறியும் சோறும் இரந்து பெற்று வந்து நம்பியாரூரர்க்கு வழங்கி 'இதனை உண்டு பசிதீரும்' என்று உபசரித்தார். சுந்தரர் அந்தணர் தந்த அமுதை அடியார்களோடு உண்டு மகிழ்ந்தார். மறையவர் விரைவில் மறைந்தார். அந்நிலையில் வன்றொண்டர் தமக்கு உணவு இரந்து பெற்று உண்பித்தவர் இறைவனேயெனத் துணிந்து இறைவன் பெருங் கருணையை வியந்து ஆலக்கோயில் பெருமானை 'முதுவாயோரி' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.

கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து திருவேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார், தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத்தங்கினார். காஞ்சியில் காமக்கோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார். திருக்கச்சியனேகதங்காவதம் சென்று துதித்தார்.