பின்பு பனங்காட்டூர், மாற்பேறு, திருவல்லம் முதலிய தலங்களைப் பணிந்து போற்றித் திருக்காளத்திமலையை அடைந்தார். காளத்தியப்பரைத் தொழுது போற்றினார். கண்ணப்பர் திறம்போற்றிக் காளத்தியில் சிலநாள் தங்கியிருந்தார். காளத்தி மலையிலிருந்த வண்ணமே வடநாட்டிலுள்ள திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களை நினைந்து இறைஞ்சித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கிக் கொண்டு கடற்கரையிலுள்ள திருவொற்றியூரை அடைந்தார். அப்பதியில் தங்கி மூன்றுபொழுதும் எழுத்தறியும் பெருமானை வழிபட்டு இனிதுறைவாராயினார். சங்கிலியார் திருமணம் : திருக்கயிலாய மலையில் உமையம்மைக்குப் பணிபுரியும் சேடியர்களாய் முன்னர் ஆலாலசுந்தரரைக் காதலித்த மகளிர் இருவருட் கமலினியார், பரவையாராய்த் தோன்றிச் சுந்தரரை மணந்தார். அல்லவா! மற்றொருவராகிய அநிந்திதையார் தொண்டை நாட்டில் ஞாயிறு என்னும் ஊரில் வாழும் ஞாயிறுகிழார் என்னும் வேளாளர்க்கு அருமைத் திருமகளாய் அவதரித்துச் சங்கிலியார் என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார். சங்கிலியார் மணப்பருவமெய்திய காலை அவருடைய வடிவு பண்பு முதலியன மண்ணுலகில் வாழ்வார்க்கு இசையா வண்ணம் மேம்பட்டிருந்தன. தாய்தந்தையர் தனக்கு மணம் பேசுவதைக் கேட்டு, 'இவர்கள் பேசுமிவ்வார்த்தை என்திறத்துப் பொருந்தாது, ஈசனடியார் ஒருவர்க்கே யானுரியேன். என் கருத்துக்கு மாறாக யாது விளையுமோ' என அஞ்சி மூர்ச்சித்து நிலமிசை விழுந்தார். தாய்தந்தையர் பதைபதைத்து, தன் மகளை மூர்ச்சை தெளிவித்து நினக்கு நிகழ்ந்த துன்பம் யாதென வினவினர். எனக்குத் திருமணம் பேசுதல் ஏற்புடையதன்று. ஈசனடியார் ஒருவரையான் மணத்தற்குரியேன், இனித் திருவொற்றியூரையடைந்து இறைபணி செய்வேன் என்றார். தாய்தந்தையர் அச்சமும் வியப்புமடைந்து பிறரறியாவாறு அந்நிகழ்ச்சியை மறைத்தொழுகினார்கள். இந்நிலையில் அவர்களோடு குலத்தால் ஒப்புடைய ஒருவன் சங்கிலியாரை மணம் பேசி வரச் சிலரை விடுத்தான். ஞாயிறுகிழார், மகளாரின் மனக்கருத்தை வெளியிடாது வேறொரு வகையால் சமாதானம் கூறி மறுத்துவிட்டார். இதற்குள் சங்கிலியாரை மணம் பேசி வர அனுப்பியவன் விரைவில் இறந்தொழிந்தான். இதனைக் கேள்வி யுற்ற ஞாயிறுகிழார் தம் மகளின் மனக்கருத்தைப் பலரும் அறிச் செய்து சங்கிலியாரைத் திருவொற்றியூரில் கன்னிமாடம் அமைத்து
|