அங்கே சிவபிரானது திருப்பணிகளைச் செய்துவருமாறு விட்டனர். சங்கிலியார் நாடோறும் பெருமானைப் பணிந்து திருமாலை தொடுக்கும் மண்டபத்தே திரையிடப்பட்டிருக்கும் இடத்தே அமர்ந்து அன்பு நாராக அஞ்செழுத்தை நெஞ்சு தொடுக்கத் திருமாலை தொடுத்து எழுத்தறியும் பெருமானுக்குச் சார்த்திவரும் திருத்தொண்டு புரிந்து வருவாராயினார். இங்ஙனம் நிகழும் நாள்களில் ஒற்றியூர்ப் பெருமானை வழிபட்டு மகிழும் சுந்தரர், அடியார்கள் செய்யும் தொண்டுகளைக் கண்டு மகிழவிரும்பித் திருமாலைதொடுக்கும் மண்டபத்தை அடைந்தார். இறைவனுக்குக் கட்டிய மலர் மாலைகளை உரியவர்களிடம் கொடுத்து விட்டுத் திரையினுள் மறையும் சங்கிலியாரைக் கண்டார். அவர்பால் உள்ளம் சென்றது. அம்மண்டபத்தை அகன்று அடியார்களை நோக்கி என்னுள்ளம் திரிவித்த இம்மங்கை யார்? என வினவினார். அருகிலிருந்தோர் இவர் தாம் நங்கை சங்கிலியார். பெருகுதவத்தால் பெருமான் திருப்பணி புரியும் கன்னியார் என்றனர். அம்மொழி கேட்ட ஆரூரர் மகளிர் இருவர் காரணமாக இப்பிறவியை எனக்கு அளித்தான் இறைவன். ஒருத்தி நங்கை பரவை. மற்றையவள் சங்கிலி என மருண்டார். இவளைச் சிவபெருமானை வேண்டிப் பெறுவேன் எனக்கூறிப் பெருமான் திருமுன் சென்று 'சங்கிலியைத் தந்து என் துயர் தீரும்' எனக் குறையிரந்து திருக்கோயிலின் ஒருபாற் சென்று கவலையோடிருந்தார். ஞாயிறு மறைய இரவும் வந்தது. ஒற்றியூர் இறைவர் வன்றொண்டரை யடைந்து, 'அடைதற்கரிய சங்கிலியை உனக்கு மணம் முடித்துத் தருவோம் கவலை யொழிக' என்றருளிச் செய்தார். நம்பியாரூரர் ஒற்றியூர் இறைவரைப் போற்றி வணங்கினார். அன்று நள்ளிரவில் பெருமான் சங்கிலியார் கனவில் தோன்றி 'சாரும் தவத்துச் சங்கிலி கேள், சால என்பால் அன்புடையவனும் நம்மால் ஆட்கொள்ளப் பெற்றவனுமாகிய சுந்தரனை மணந்துகொள்' எனப் பணித்தருளினார். அவ்வருள் மொழி கேட்ட சங்கிலியார், 'உம்மாலருளிச் செய்யப் பட்டார்க்கு யானுரியேன், ஆயினும், திருவாரூரில் மகிழ்ச்சியுடனிருக்கும் விருப்பமுடையவர் அவர் என்பதையும் தாங்கள் அறிந்தருள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். அதைக் கேட்ட இறைவன் 'வன்றொண்டன் உன்னைப் பிரியேன்' என உனக்கொரு சத்தியம் செய்து தருவான் எனக் கூறியருளினார்.
|